போர்ட்ஃபோலியோவை மறுபரிசீலனை செய்ய வேண்டியதன் முக்கியத்துவம்: லாபத்தை அதிகரித்து ரிஸ்க்கைக் குறைக்க எளிய வழி...

August 11, 2025
9 min read

மியூச்சுவல் ஃபண்டில் நீண்ட கால நோக்கில் முதலீடு செய்வதன் மூலம் நம்முடைய செல்வத்தை சிறப்பாகப் பெருக்க முடியும். மியூச்சுவல் ஃபண்டில் நீண்ட காலம் முதலீடு செய்தாலே உங்கள் செல்வம் பெருகிவிடாது. குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை உங்கள் போர்ட்ஃபோலியோவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஆக்டிவ்-ஆக நிர்வாகம் செய்யப்படும் ஒரு ஃபண்ட் திட்டத்தின் வருமானமானது ஃபண்ட் மேனேஜர் பணத்தை எப்படி நிர்வாகம் செய்கிறார், சந்தை ஏற்ற, இறக்கத்தை எப்படி சமாளிக்கிறார் என்பதைப் பொறுத்து மாறுபடும். உங்கள் எதிர்கால இலக்குகளை நீங்கள் சரியாக நிறைவேற்றிக்கொள்ளத் தேவையான நிதியை சேர்க்க வேண்டும் எனில், உங்கள் போர்ட்ஃபோலியோவை குறித்த காலத்துக்கு ஒருமுறை மறுபரிசீலனை செய்வது அவசியம்!

குறித்த காலத்துக்கு ஒருமுறை உங்கள் போர்ட்ஃபோலியோவை மறுபரிசீலனை செய்ய வேண்டியதற்கான காரணங்களை இனி பார்ப்போம்...

1. உங்கள் சொத்து ஒதுக்கீட்டுக்கு உண்மையாக இருப்பது...

உங்கள் எதிர்கால நிதி இலக்குகளைப் பொறுத்தும், நீங்கள் எடுக்கத் தயாராக இருக்கும் ரிஸ்க்குகளைப் பொறுத்தும், உங்கள் அசெட் அலோகேஷனானது கொஞ்சம் பங்குச் சந்தை, கொஞ்சம் கடன் சந்தை, கொஞ்சம் பிற முதலீடுகள் என சேர்த்து உருவாக்கப்பட்டு இருக்கும். சந்தையில் நிகழும் மாற்றங்கள் காரணமாக இந்த அசெட் அலோகேஷன் என்பது மாற்றம் அடையும். உங்கள் போர்ட்ஃபோலியோவை நீங்கள் மறுபரிசீலனை செய்யவில்லை எனில், உங்கள் முதலீடானது அதிக ரிஸ்க் கொண்டதாகவோ அல்லது ரிஸ்க்கே இல்லாதவற்றிலோ இருந்துவிட வாய்ப்பு உண்டு. இதனால், உங்களுக்குக் கிடைக்க வேண்டிய வருமானம் மிகவும் குறைந்துவிடும்.

2. ரிஸ்க்கிற்கு முக்கியத்துவம் தந்து குறைப்பது...

சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கேற்ப உங்கள் முதலீட்டு ரிஸ்க்கானது மாற்றி அமைக்கப்பட வேண்டும். குறித்த காலத்துக்கு ஒருமுறை உங்கள் போர்ட்ஃபோலியோவை மறுபரிசீலனை செய்யும்போது நீங்கள் எடுக்க வேண்டிய ரிஸ்க்கானது நீங்கள் தாங்கிக்கொள்ளக்கூடிய அளவில் உள்ளதா என்பதைக் கணக்கிட்டுப் பார்க்க முடியும். உதாரணமாக, பங்குச் சந்தை உச்சத்தில் இருக்கும்போது, உங்கள் முதலீட்டின் ஒரு பகுதியை எடுத்து பாதுகாப்பான முதலீடுகளான கடன் பத்திரங்களில் அல்லது கடன் சந்தை சார்ந்த ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய முடியும். இதை செய்யத் தவறும்பட்சத்தில் சந்தை இறக்கத்தின் காரணமாக குறிப்பிட்ட அளவு நஷ்டத்தை நீங்கள் அனுபவிக்க வேண்டியிருக்கும்.

3. மார்க்கெட் சுழற்சியில் கிடைக்கும் நன்மைகளைப் பயன்படுத்திக்கொள்வது...

சந்தை என்பது ஏற்றம், இறக்கம், நிலைபெறுவது எனப் பல நிலைகளைக் கொண்டது. இந்த நிலைகளுக்கேற்ப உங்கள் போர்ட்ஃபோலியோவை நீங்கள் மறுபரிசீலனை செய்யவில்லை எனில், இந்தச் சுழற்சியின் மூலம் கிடைக்கும் நன்மைகளை நீங்கள் பெறாமலே போவீர்கள். சில பிசினஸ் சுழற்சிகளில் சில துறைகள் அல்லது சில ஃபண்டுகள் சிறப்பாக செயல்படும். இந்த சுழற்சியை சரியாகப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப நமது போர்ட்ஃபோலியோவை மாற்றி அமைப்பதன் மூலம் நமது முதலீட்டு அணுகுமுறையை இன்னும் சிறப்பானதாக ஆக்க முடியும்.

4. நன்கு செயல்படாத முதலீடுகளைத் தவிர்ப்பது...

ஒவ்வொரு முதலீட்டாளரும் தன்னுடைய போர்ட்ஃபோலியோ நன்கு செயல்படும் என்றுதான் நினைக்கிறார். ஆனால், சில சமயங்களில் அவருடைய எதிர்பார்ப்புக்கு மாறாக அவருடைய போர்ட்ஃபோலியோ சரியாக செயல்படாமல் போகிறது. நன்கு செயல்படாத முதலீட்டில் உங்கள் பணத்தை நீண்ட காலம் வைத்திருப்பதால், நன்கு செயல்படக் கூடிய முதலீட்டில் உங்கள் பணத்தை முதலீடு செய்வதற்கான வாய்ப்பினை இழப்பீர்கள். உங்கள் போர்ட்ஃபோலியோவைக் குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை மறுபரிசீலனை செய்வதன் மூலம் நன்கு செயல்படக்கூடிய முதலீடுகளில் உங்கள் பணத்தை வைத்திருந்து அதிகமான வருமானத்தைப் பெறுவதுடன், உங்கள் போர்ட்ஃபோலியோவை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க முடியும்.

5. வருமான வரியை சிறப்பாக நிர்வாகம் செய்வது...

எந்த முதலீட்டு முடிவை மேற்கொள்ளும்போதும், அதற்கான வரியைக் கவனத்தில் கொள்வது மிகவும் அவசியம். உதாரணமாக, மூலதன ஆதாயத்தைக் கணக்கில் கொள்ளாமல் பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டில் இருக்கும் முதலீட்டினை விற்கும்போது வரிக்குப் பின்பு உங்களுக்குக் கிடைக்கும் வருமானம் குறைவதைப் பார்த்திருப்பீர்கள். குறித்த காலத்துக்கு ஒருமுறை உங்கள் போர்ட்ஃபோலியோவை மறுபரிசீலனை செய்யும்போது எந்த ஃபண்டை எப்போது விற்க வேண்டும், எந்த ஃபண்டை எவ்வளவு காலத்துக்கு வைத்திருக்க வேண்டும், தேவை இல்லாமல் வரியைக் கட்டுவது எப்படித் தவிர்க்க வேண்டும் என்பதைத் துல்லியமாகத் திட்டமிட முடியும். இப்படிச் செய்வதன் மூலம் நீண்ட காலத்தில் அதிகமாக வருமானத்தைப் பெற்று, குறைந்த அளவு வரியை நம்மால் செலுத்த முடியும்.

ஆரோக்கியமான போர்ட்ஃபோலியோவுக்கு அடிக்கடி மறுபரிசீலனை வேண்டும்...

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது ஒருமுறை முதலீடு செய்துவிட்டு மறந்துவிடக்கூடியதல்ல. குறித்த காலத்துக்கு ஒருமுறை, உதாரணமாக ஆறு மாதத்துக்கு ஒருமுறையாவது உங்கள் போர்ட்ஃபோலியோவை மறுபரிசீலனை செய்வதன் மூலம் உங்கள் எதிர்கால இலக்குகளை அடையத் தேவையான நிதித் தொகுப்பினை உங்களால் சேர்க்க வழிசெய்கிறது. உங்கள் அசெட் அலோகேஷனை மாற்றி அமைப்பதாக இருந்தாலும் சரி, உங்கள் ரிஸ்க்கை சிறப்பாக நிர்வாகம் செய்வதாக இருந்தாலும் சரி, நன்கு செயல்படாத முதலீடுகளில் உங்கள் பணம் இருப்பதைத் தவிப்பதாக இருந்தாலும், குறித்த காலத்துக்கு ஒருமுறை உங்கள் போர்ட்ஃபோலியோவை மறுபரிசிலனை செய்வதன் மூலமே சாத்தியமாகும்.

உங்கள் போர்ட்ஃபோலியோவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனில், ஒரு நல்ல நிதி ஆலோசகருடன் கலந்தாலோசியுங்கள். உங்கள் நிதி சார்ந்த இலக்குகளை அடைய அவர் உங்களுக்கு சரியான வழியைக் காட்டுவார். உங்கள் போர்ட்ஃபோலியோவை சரியாக அமைத்துக் கொள்வதே உங்கள் நீண்ட கால நிதி சார்ந்த வெற்றியை அடைவதற்கான மிகச் சிறந்த வழி என்பதை என்றும் மறக்காதீர்கள்!