முதலீடு செய்யும்முன் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்…

ஏதேதோ திட்டங்களில் பணத்தை போட்டு இழப்பது சிலருக்கு வழக்கமான விஷயமாக இருக்கிறது. எந்தத் திட்டமாக இருந்தாலும் சரி, பணத்தை முதலீடு செய்வதற்குமுன் என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும் என்பதை பார்ப்போம்
1. கவர்ச்சிகரமான திட்டங்கள் வேண்டாம்…
நம்மில் பலர் போதிய விழிப்புணர்வு இல்லாததால் கவர்ச்சிகரமான முதலீட்டுத் திட்டங்களில் சிக்கிக் கொள்கிறார்கள். இதை தவிர்க்க நிதி, முதலீடு குறித்த அடிப்படை விவரங்களை தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும்.
அதிக வருமானம் கிடைக்கும்; அதிக வட்டி கிடைக்கும் என்றெல்லாம் சொன்னால், அது எப்படி சாத்தியம், நம்மிடம் வாங்கும் பணம் எந்தத் திட்டத்தில் போடப் போகிறார்கள் என்பதை எல்லாம் நன்கு கேட்டு, அவர்கள் சொல்வது சரியா என்பதை ஒன்றுக்கு பலமுறை விசாரித்தபின்பே பணத்தைப் போட வேண்டும்.
2. எதிர்பாராத செலவுகளுக்கு அவசர கால நிதி அவசியம்…
மனித வாழ்க்கையில் எப்போது வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அந்த வகையில் எதிர்பாராத செலவுகளுக்குத் திட்டமிடுவது அவசியமாகும். திடீர் உடல் நலக்குறைவு, வேலை இழப்பு, விபத்து, அவசர செலவு போன்றவற்றை சமாளிக்க மாத செலவில் 3-6 மடங்கு தொகையை அவசரக் காலத் தொகையாக சேர்த்து வையுங்கள். அப்போதுதான் முதலீட்டை நீண்ட காலத்துக்கு நிம்மதியாக உங்களால் தொடர முடியும்.
3. முதலீட்டு முடிவுகளில் அவசரம் வேண்டாமே!
முதலீடு செய்யும்போது அவசரம் என்பது கட்டாயம் கூடாது. ஏதாவது ஒரு முதலீட்டை அவசரம் அவசரமாக செய்யும்போது தவறுகளையே செய்கிறோம். இதனால் நமக்கு நஷ்டமே வருகிறது. "பங்குச் சந்தை என்பது பொறுமை இல்லாதவர்களிடமிருந்து பொறுமை உள்ளவர்களுக்குப் பணம் கைமாறும் இடம்'' என்று வாரன் பஃபெட் சொல்லி இருப்பது கவனிக்கத்தக்கது. பங்குச் சந்தை மட்டுமல்ல, எந்த வகை முதலீடாக இருந்தாலும் அதைப் புரிந்துகொண்டு அவசரப்படாமல் நம்மால் பொறுமையாக இருக்க முடியும் எனில்,பெருமளவு நஷ்டத்தை நம்மால் தடுக்க முடியும்!
4. நம்பகமான தகவல்களைத் தேடுங்கள்..!
நிதி உலகில், தவறான தகவல்களுக்கும், வதந்திகளுக்கும், ஊக ஆலோசனைகளுக்கும் பஞ்சமில்லை. அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று ஏதாவது ஒன்றில் பணத்தைப் போட்டு இழப்பதற்கு பதிலாக, எதில் முதலீடு செய்யப் போகிறோம், அதில் உள்ள ரிஸ்க் என்ன, எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதைக் குறித்தெல்லாம் நம்பகமான தகவல்களைத் தேடி அறிந்து, முதலீடு செய்வது அவசியம்.
5. நீண்ட கால முதலீட்டுக்கு திட்டமிடுங்கள்..!
உங்கள் இலக்குகள் என்னென்ன என்பதை நன்கு அறிந்துகொண்டு, அதற்கேற்ப நீண்ட கால முதலீட்டை மேற்கொள்வது அவசியமாகும். காலப்போக்கில் வளரக்கூடிய சொத்துகளாக பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளான நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் உள்ளன. இவற்றில் குறுகிய காலத்தில் மூலதன மதிப்பு ஏற்ற இறக்கத்துக்கு உட்பட்டது; இது இயற்கையானதும் ஆகும். அந்த வகையில், இந்த முதலீடுகளில் ஏற்படும் குறுகிய கால இழப்புகள் பற்றி கவலைப்பட தேவையில்லை. நீண்ட கால முதலீட்டில் கவனம் செலுத்தினால் பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானத்தை பெற முடியும். ஆக, முதலீடு செய்யும்முன் இந்த ஐந்து விஷயங்களையும் மனதில் கொண்டு செயல்பட்டால், உங்களால் நீண்ட காலத்தில் பணவீக்கத்தைத் தாண்டிய வருமானத்தைப் பெற முடியும் என்பது நிச்சயம்!
- ‘லாபம்’ மூலம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டைத் தொடங்க:
- bit.ly/labham-money லிங்க் க்ளிக் செய்து எங்களின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ‘Hi’ என்று மெசேஜ் செய்யவும்.
- அல்லது, ஃபோனில் அழைக்கவும்96002 96001
- அல்லது நேரடியாக முதலீட்டைத் தொடங்க,my.labham.money பேஜில் லாகின் செய்யவும்.