பணவீக்கத்தை சமாளிக்க எதில் முதலீடு செய்யலாம்?

பணவீக்கம் (Inflation) என்கிற விலைவாசி பணத்தின் மதிப்பை குறைக்கும் அதே நேரத்தில் பொருள்களின் விலையையும் உயர்த்திவிடுகிறது. இதனால், செலவுக்கு போதிய பணம் இல்லாமல் திண்டாட வேண்டிய நிலை உருவாகிறது.

அந்த நிலையில் ஒருவர் ஒன்று, செலவுகளைக் குறைக்க வேண்டும் அல்லது தரம் மற்றும் விலை குறைந்த பொருள்களை வாங்கி பயன்படுத்த வேண்டும் அல்லது, 3. கடன் வாங்கி செலவு செய்ய வேண்டும் என மூன்று நிலைகளை சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.

பணவீக்கத்தைவிட அதிக வருமானம் தரும் முதலீடு..!

இந்த மூன்று நிலைகளையும் ஒருவர் தவிர்க்க அவர் பணவீக்கத்தைவிட அதிக வருமானம் தரும் திட்டங்களில் முதலீடு செய்வது அவசியமாகும். உதாரணமாக, இன்றைக்கு கணவன், மனைவி இருவரின் குடும்பச் செலவு மாதம் ரூ.25,000 என்று வைத்துக்கொள்வோம். 15 ஆண்டு கழித்து 60 வயதில் கணவன் பணி ஓய்வு பெறுகிறார். சராசரி விலைவாசி உயர்வு ஆண்டுக்கு 7% என்றால் ரூ.68,975 இருந்தால்தான் பணி ஓய்வுக் காலத்தில் செலவுகளை சுலபமாகச் சமாளிக்க முடியும். இவர்கள் 75 வயது வரைக்கும் வாழ்வார்கள் என்றும் முதலீட்டுக்கு ஆண்டுக்கு 13% வருமானம் மற்றும் தொகுப்பு நிதிக்கு ஆண்டுக்கு 8% வருமானம் கிடைக்கிறது என வைத்துக்கொண்டால் தொகுப்பு நிதி எவ்வளவு வேண்டும்?

இந்தக் கேள்விக்கான பதிலைப் பார்க்கும்முன், நம் முன் உள்ள முதலீட்டு வாய்ப்புகளும் அவற்றுக்கு ஆண்டுக்கு என்ன வருமானம் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

ஃபிக்ஸட் டெபாசிட் : 7% - 8%

கடன் பத்திரம்: 8% - 9%

கடன் சந்தை மியூச்சுவல் ஃபண்ட்: 8% - 9%

தங்கம்: 8% - 9%

பங்குச் சந்தை: 14% - 15%

பங்குச் சந்தை மியூச்சுவல் ஃபண்ட்: 11% - 12%

மேற்கண்டவற்றில் ஃபிக்ஸட் டெபாசிட், கடன் பத்திரம், கடன் சந்தை மியூச்சுவல் ஃபண்ட், தங்கம் ஆகியவை கிட்டத்தட்ட விலைவாசி உயர்வு அல்லது அதைவிட 1% - 2% தான் கூடுதல் வருமானம் கொடுத்திருக்கின்றன. மேலும், இவற்றின் மூலமான வருமானத்துக்கு வருமான சலுகை எதுவும் கிடையாது. அதாவது, முதலீட்டுக் காலம் எதுவாக இருந்தாலும் ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் வருகிறாரோ அதற்கேற்ப வரி கட்ட வேண்டும்; அதிக வருமானம் ஈட்டுபவர்கள் அதிக வருமான வரி கட்ட வேண்டி வரும்.

எனவே, நீண்ட கால முதலீட்டுக்கு இந்த முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது.

அடுத்து, பங்குச் சந்தை முதலீடு என்கிறபோது அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், ரிஸ்க் மிக அதிகம்; பங்குச் சந்தை பற்றிய நல்ல தெளிவு மற்றும் அதிக ரிஸ்க் எடுக்கக் கூடியவர்களுக்கு மட்டுமே இந்த முதலீடு ஏற்றதாக உள்ளது.

வரி எவ்வளவு?

நிறுவனப் பங்குகள் மூலமான லாபத்துக்கு ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் வந்தாலும் ஓராண்டுக்கு மேற்பட்ட நிலையில் நிதியாண்டில் ரூ.1.25 லட்சம் வரை வருமான வரி இல்லை. அதற்கு மேற்பட்ட லாபத்துக்கு 12.5% வரி கட்டினால் போதும்.

பங்குச் சந்தை மியூச்சுவல் ஃபண்ட் திட்டம்..!

இறுதியாக எஞ்சி இருப்பது பங்குச் சந்தை மியூச்சுவல் ஃபண்ட் (Equity Mutual Fund) திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தைப் பொறுத்தவரை, முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் பணம், 30 முதல் 60 நிறுவனப் பங்குகளில் பிரித்து முதலீடு செய்யப் படுவதால் ரிஸ்க் வெகுவாகக் குறைகிறது. மேலும், இந்த ஃபண்ட் திட்டத்தை நிர்வகிக்க நிதி மேலாளர் (Fund Manager) மற்றும் அவரின் குழுவினர் இருக்கிறார்கள். இதனால், இந்த ஃபண்டின் ரிஸ்க் குறைவதோடு அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. அடுத்து பங்குச் சந்தை முதலீடு போல் இதற்கு வருமான வரிச் சலுகை இருக்கிறது. அந்த வகையில், இதர முதலீடுகளுடன் ஒப்பிடும்போது ஓராண்டுக்கு மேற்பட்ட நீண்ட கால மூலதன லாபத்துக்குக் குறைவான வரி கட்டினால் போதும்.

15 ஆண்டுகள் கழித்து மாதம் ரூ.68,975 பெற ஆண்டுக்கு 13% வருமானம் எதிர்பார்க்கும் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் மாதம் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் எனப் பார்ப்போம்.

60 வயதில் ரூ.1,15,34,530 சேர்க்க வேண்டும். அதற்கு மாதம்தோறும் சீரான முதலீட்டுத் திட்ட (Systematic Investment Plan - SIP) முறை மூலம் ரூ.20,760 முதலீடு செய்து வர வேண்டும். அல்லது ஒரு முறையாக ரூ.18,44,265 முதலீடு செய்ய வேண்டும். இதுவே முதலீடு மூலமான வருமானம் 14%, 15% என அதிகமாக இருந்தால் குறைவான தொகையே முதலீடு செய்தால் போதும்.

மாத முதலீட்டுத் தொகையான ரூ.20,760-ஐ தலா சுமார் ரூ.5,000 வீதம் நான்கு பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து வரலாம். இந்த முதலீட்டிலும் ரிஸ்கைக் குறைக்க லார்ஜ் கேப் ஃபண்ட், மல்டி கேப் ஃபண்ட், ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட், லார்ஜ் & மிட் கேப் , மல்டி அஸெட் ஃபண்டுகளில் தலா ரூ.5,000 வீதம் முதலீடு செய்து வரலாம். மொத்த முதலீடு செய்வதாக அதையும் முதலீட்டுத் தொகை நான்காகப் பிரித்துக்கொண்டு இந்த நான்கு வகை ஃபண்ட் பிரிவுகளில் முதலீடு செய்து வரலாம். இப்படி முதலீடு செய்யும்பட்சத்தில் ஒருவரின் எதிர்காலம் மற்றும் பணி ஓய்வுக் காலம் நிச்சயம் பாதுகாக்கப்பட்டதாக இருக்கும்.

    ‘லாபம்’ மூலம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டைத் தொடங்க:
  • bit.ly/labham-money லிங்க் க்ளிக் செய்து எங்களின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ‘Hi’ என்று மெசேஜ் செய்யவும்.
  • அல்லது, ஃபோனில் அழைக்கவும்96002 96001
  • அல்லது நேரடியாக முதலீட்டைத் தொடங்க,my.labham.money பேஜில் லாகின் செய்யவும்.