SIP மூலம் பணம் சேர்த்து SWP மூலம் பணம் எடுத்து, ஓய்வுக் காலத்தில் நிம்மதியாக வழிகள்!

மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி மூலம் பணம் சேர்ப்பது இன்றைக்கு பிரபலமாகி வருகிறது. நகர்ப்புறங்களில் வசிக்கும் நடுத்தர வயதில் இருக்கும் பலரும் இன்றைக்கு எஸ்.ஐ.பி முறையின் மூலம் முதலீடு செய்து வருகிறார்கள். புதிதாக வேலைக்குச் சேர்ந்த இளைஞர்கள் எதிர்காலத் தேவைகான பணத்தை சேமிக்க எஸ்.ஐ.பி முறையைத் தேர்வு செய்து வருவது நிதி சுதந்திரத்தின் இருப்பதற்கு அடிப்படையான விஷயமாக இருக்கும்.

முதலில் எஸ்.ஐ.பி; அடுத்து, எஸ்.ட்பிள்யூ.பி!

சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்று சொல்லப்படுகிற எஸ்.ஐ.பி ஒருபக்கம் பிரபலமாகி வரும் அதே நேரத்தில், சிஸ்டமேட்டிக் வித்ராயல் பிளான் என்று சொல்லப்படும் எஸ்.டபிள்யு.பி என்கிற திட்டமும் இன்றைக்கு மக்களிடம் பிரபலமாகி வருகிறது.

அது என்ன எஸ்.டபிள்யு.பி என்று கேட்கிறீர்களா?

ஒருவர் தனது 25-ஆம் வயது தொடங்கி ஒரு குறிப்பிட்ட தொகையை மாதந்தோறும் எஸ்.ஐ.பி முறையில் சேர்த்து வருகிறார். அவருடைய 60-வது வயதில் 2 கோடியை சேர்த்துவிட்டார் என்று வைத்துக்கொள்வோம். 60 வயதுக்குப்பிறகு அவரால் வேலை செய்து சம்பளம் பெறமுடியாது என்கிற நிலையில், அவர் சேர்த்து வைத்துள்ள ரூ.2 கோடியில் இருந்து மாதந்தோறும் ரூ.50,000 என்கிற அளவில் பணத்தைத் திரும்பப் பெற்று, அதை தன் வாழ்நாள் முழுக்க செலவு செய்து நிம்மதியாக வாழலாம்!

அரசு வேலையாக இருந்தாலும் இனி பென்ஷன் கிடைக்காது. என்.பி.எஸ் திட்டம் மூலம் நம்முடைய ஓய்வுக் காலத்துகான பணத்தை நாம்தான் சேர்த்துவர வேண்டும் என்பதுதான் இன்றைய நிலை. தனியார் ஊழியர்கள் என்.பி.எஸ் திட்டத்தில் சேர்ந்து ஓய்வுக் காலத்துக்குத் தேவையான பணத்தை சேர்க்க முடியும் என்றாலும் அதில் சிலபல கட்டுப்பாடுகளும் உண்டு. அது மாதிரியான கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாத, நீண்ட காலத்தில் எஸ்.பி.எஸ் திட்டத்தைவிட அதிக லாபம் தருகிற மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் இளமைக் காலத்தில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து, ஓய்வுக் காலத்தில் எஸ்.டபிள்யூ.பி முறையில் தேவையா அளவுக்குப் பணத்தை எடுத்து, செலவு பற்றிய எந்த பயமும் இல்லாமல் நிம்மதியாக வாழலாம்!

சம்பாதிக்கும் காலகட்டம்...

நம்மில் பலரும் சம்பளப் பணம், சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் எவ்வளவு விரைவாகச் செலவு செய்ய முடியுமோ, அவ்வளவு வேகமாகச் செலவு செய்துவிடுகிறார்கள். சம்பாதிக்கும் பணம் என்பது சம்பாதிக்கும் காலத்தில் செலவு செய்ய மட்டும் அல்ல; பிள்ளைகளின் மேற்படிப்பு, திருமணம், பணி ஓய்வுக்கால செலவுகள் எல்லாவற்றுக்கும் ஆனதுதான் என்பதைப் பலரும் மறந்து விடுகிறார்கள்.

எப்போதும் தேவைக்கு மட்டுமே செலவு செய்யப் பழக வேண்டும். ஒருவர் முதல் ஒரு கோடி ரூபாய் சேமிக்கும் வரையில் அநாவசிய செலவுகளுக்கு இடமளிக்காமல் இருப்பது மிகவும் நல்லது. அந்த வகையில், எதிர்கால தேவைகளுக்குச் சம்பளத்தில் சேமித்து வருவது அவசியம் ஆகும். சம்பளத்தில் குறைந்தபட்சம் 30 சதவிகித தொகையைக் கட்டாயம் சேமிக்க வேண்டும். சம்பளம் அதிகரிக்க அதிகரிக்க செலவைக் கூட்டாமல் சேமிப்பை அதிகரித்தால் விரைவிலேயே யார் வேண்டுமானாலும் தங்களுடைய முதல் ஒரு கோடி ரூபாயைச் சேர்த்துவிட முடியும்.

சிக்கனத்தில் ஜப்பானியர்கள் போல இருக்க வேண்டும். ஜப்பானியர்கள் அவர்களின் வாழ்க்கை வசதி மேம்படும் வரை மிக மிகச் சிக்கனமாக இருக்கிறார்கள். அவர்கள் சம்பளத்தில் சாதாரணமாக 50% சேமிக்கிறார்கள். நன்றாகச் சேமித்து பெரும் செல்வம் சேர்த்த பிறகுதான் அவர்கள் ஆசைப்பட்டதற்கு செலவிட ஆரம்பிக்கிறார்கள். இந்தப் பழக்கத்தை எல்லோரும் பின்பற்றத் தொடங்கினா, எல்லோருடைய நிதி வாழ்க்கையும் விரைவிலேயே வளமாகும்.

செலவு செய்யும் காலகட்டம்...

சரி, சிக்கனமாக வாழ்க்கை நடத்தி, ரூ.1 கோடி சேர்க்க வேண்டும். இப்படிப் பணத்தை சேர்த்தபிறகு, இரண்டாவது கட்டத்தில் அப்படி இல்லை, வாழ்க்கையில் பொழுதுபோக்குக்கு எனச் சிறிது நேரத்தை ஒதுக்க வேண்டும். அதற்குச் சிறிது தொகையையும் ஒதுக்க வேண்டும். வாழ்க்கையில் மனிதர்கள் மிக சந்தோஷமான தருணங்களில்தான், மனதளவில் மிக வலுவாக உணருகிறார்கள்.

சிலர் பல கோடி ரூபாய் சேர்த்து வைத்திருந்தாலும், இந்தியாவைத் தாண்டி வெளியே எங்கும் சென்றிருக்க மாட்டார்கள். வாழ்க்கையைச் சந்தோஷமாக வாழத்தான் பணம். ஆனால், பலரும் பணம் சம்பாதிப்பது மட்டுமே வாழ்க்கை என நினைக்கிறார்கள். அப்படி இருந்தால் வயதான காலகட்டத்தில் நீங்கள் விரும்பிய பல விஷயங்களைச் செய்ய முடியாது. ஆக இந்த இரண்டாவது கட்டத்தில் சம்பாதிக்கும் தொகையில் ஒரு பகுதியைச் சந்தோஷத்துக்காகவும், ஒரு பகுதியை சேமிப்புக் காகவும் சமநிலைப்படுத்தி செலவிடலாம். இந்தக் காலகட்டத்தில் ஒருவர் தன்னுடைய தொகுப்பு நிதி இலக்கை ரூ.1 – ரூ.3 கோடி ரூபாயாக வைத்திருக்க வேண்டும்.

அனுபவிக்கும் காலகட்டம்...

மனிதர்களின் வாழ்க்கையில் இந்த அனுபவிக்கும் கட்டம் மிக முக்கியமானது. இங்குதான் உங்கள் முதல் இரண்டு கட்டங்களில் சம்பாதித்த தொகைக்கு ஏற்ப அள்ள அள்ள குறையாமல் பணம் சேர்ந்திருக்கும்.

உதாரணத்துக்கு, ஒருவரிடம் 3 கோடி ரூபாய் தொகுப்பு நிதி இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அதற்கு ஆண்டுக்குச் சராசரியாக 15% வருமானம் கிடைக்கிறது எனக் கணக்கிட்டால், ஓராண்டில் வருமானம் மட்டும் 45 லட்சம் ரூபாய் கிடைக்கும். அதாவது, மாதம் ரூ.3.75 லட்சம் கிடைக்கும். இந்தத் தொகையை எடுத்து மாதம்தோறும் செலவு செய்துவிட்டாலும் அடுத்த மாதமும் இதே தொகை கிடைக்கும் என்ப தால் தேவைக்கு எல்லாம் செலவு செய்து கொண்டே இருக்கலாம்.

தொகுப்பு நிதி ரூ.3 கோடி இல்லை; ரூ.1 கோடிதான் இருக்கிறது என்றால் மாதம் ரூ.1.25 லட்சம் செலவுக்கு கிடைக்கும். அந்த வகையில் ரூ.1 கோடி இருந்தாலே வாழ்க்கையை நன்றாகவே அனுபவிக்க முடியும்.

முதலீட்டுத் திட்டம்...

இன்றைக்குப் புதிதாக 22 வயதில் வேலைக்குச் சேரும் ஒருவரின் ஆரம்ப சம்பளம் ரூ.25,000 - ரூ.30,000-ஆக உள்ளது. இவர்களின் சம்பளம் 25 வயதில் ரூ.40,000, சுமார் 30 வயதில் ரூ.50,000 - ரூ.60,000 என்பதாக அதிகரித்துவிடுகிறது. ஒருவர் மாதம்தோறும் ரூ.25,000-ஐ எஸ்.ஐ.பி முறையில் முதலீட்டை ஆரம்பிக்கிறார். அவர் ஆண்டுதோறும் முதலீட்டுத் தொகையை 5% அதிகரிப்பதாக வைத்துக்கொள்வோம்.

இந்த முதலீட்டுக்கு ஈக்விட்டி ஃபண்டுகள் மூலம் ஆண்டுக்குச் சராசரியாக 15% வருமானம் கிடைக்கும். அதன்படி முதலீடு செய்துவந்தால், 12 ஆண்டு களில் அவரிடம் ரூ.1.18 கோடி சேர்ந்திருக்கும். இதற்காக அவர் 12 ஆண்டுகளில் முதலீடு செய்திருக்கும் மொத்தத் தொகை ரூ.47.75 லட்சம் ஆகும். இதுவே மாத முதலீட்டுத் தொகை ரூ.40,000 என்றால் 8 ஆண்டுகளில் ரூ.1 கோடி சேர்ந்திருக்கும்.

ஒருவர் மாதம்தோறும் ரூ.25,000-ஐ எஸ்.ஐ.பி முறையில் முதலீட்டை ஆரம்பிக்கிறார். அவர் ஆண்டுதோறும் முதலீட்டுத் தொகையை 5% அதிகரிப்பதாக வைத்துக்கொள்வோம். இந்த முதலீட்டுக்கு ஈக்விட்டி ஃபண்டுகள் மூலம் ஆண்டுக்கு சராசரியாக 15% வருமானம் கிடைத்தால் 18 ஆண்டுகளில் அவரிடம் ரூ.3.3 கோடி சேர்ந்திருக்கும். இதற்காக அவர் 18 ஆண்டுகளில் முதலீடு செய்திருக்கும் மொத்தத் தொகை ரூ.84.4 லட்சம் ஆகும்.

உங்களின் வாய்ப்பு வசதிக்கு ஏற்ப எவ்வளவு தொகையைச் சேர்க்க முடியுமோ, அவ்வளவு அதிகமாகச் சேருங்கள். மாதம்தோறும் ஒருவர் ரூ.10,000-ஐ ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீட்டை ஆரம்பித்து அதை ஆண்டுக்கு 3% அதிகரித்து வந்தால், அவருக்கு 18 ஆண்டு களில் ரூ.1.17 கோடி தொகுப்பு நிதி சேரும். விரிவான விவரங்களுக்கு அட்டவணையைப் பார்க்கவும்.

சரியாகச் செலவு செய்வது எப்படி?

இப்படி சேரும் தொகுப்பு நிதியை சரியாகச் செலவு செய்வதன் மூலம் வாழ்க்கையை நன்றாக அனுபவிக்க முடியும். முதலீட்டில் எடுக்கும் ரிஸ்க்கைப் பொறுத்துதான், தொகுப்பு நிதியிலிருந்து கிடைக்கும் வருமானமும் இருக்கும். அந்தவகையில் முதலீட்டாளரின் ரிஸ்க் எடுக்கும் திறனைப் பொறுத்து ஹைபிரிட் மியூச்சுவல் ஃபண்ட் (எதிர்பார்க்கும் ஆண்டு வருமானம் 10%), கடன் ஃபண்ட் (9% வருமானம்), ஃபிக்ஸட் டெபாசிட் / கடன் பத்திரம் (8%) ஆகிய ஏதாவது, ஒரு திட்டத்தில் முதலீடு செய்யலாம் அல்லது இந்தத் திட்டங்களில் கலந்து முதலீடு செய்யலாம்.

உங்களுக்கு வேண்டுமா?

தொகுப்பு நிதியிலிருந்து குறைவான தொகை யைத்தான் எடுத்து செலவு செய்யப்போகிறேன்; ரிஸ்க் எடுக்கத் தயார் என்பவர்கள் தொகுப்பு நிதியையும் ஈக்விட்டி ஃபண்டுகளிலேயே முதலீடு செய்யலாம்.

ஒருவர் ரூ.1 கோடி தொகுப்பு நிதியை ஆண்டுக்கு சுமார் 10 சதவிகிதம் வருமானம் எதிர்பார்க்கும் பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டில் முதலீடு செய்வதாக வைத்துக் கொள்வோம். ஓராண்டில் ரூ.10 லட்சம் வருமானம் கிடைக்கும். அதாவது, மாதத்துக்கு ரூ.83,333 கிடைக்கும். இந்தத் தொகையை அப்படியே செலவு செய்து வந்தால் தொகுப்பு நிதி ஆண்டாண்டு காலமாக அப்படியே ரூ.1 கோடியாக இருக்கும். இதுவே ரூ.83,333-க்குப் பதிலாக ரூ.50,000 என்பது போல் குறைவான தொகையை முதல் ஆண்டு முடிவிலிருந்து எடுத்து செலவு செய்தால், அடுத்து வரும் ஆண்டுகளில் தொகுப்பு நிதி ரூ.1 கோடிக்கு மேல் அதிகரித்திருக்கும். இப்படி அதிகரித்து வரும் நிலையில், மூன்றாண்டு கழித்து விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மாதம் ரூ.60,000 எடுத்து, செலவு செய்யலாம். வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்கலாம்.

எனவே, ஓய்வுக் காலத்தை நிம்மதியாகக் கழிக்க இப்போதே எஸ்.ஐ.பி முறையில் பணம் சேர்க்கத் தொடங்கி, எஸ்.டபிள்யு.பி முறையில் பணத்தை எடுத்து, நிம்மதியாக வாழ இப்போதே முதலீடு செய்யத் தொடங்குங்கள்!

    ‘லாபம்’ மூலம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டைத் தொடங்க:
  • bit.ly/labham-money லிங்க் க்ளிக் செய்து எங்களின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ‘Hi’ என்று மெசேஜ் செய்யவும்.
  • அல்லது, ஃபோனில் அழைக்கவும்96002 96001
  • அல்லது நேரடியாக முதலீட்டைத் தொடங்க,my.labham.money பேஜில் லாகின் செய்யவும்.