பெரும் லாபம் தந்த எம்.எஃப்... பெரும் நஷ்டம் தந்த பண்ணை நிலம்!

‘‘மாப்ளே... புரோக்கர் ஒரு பார்ட்டிய கூட்டி வந்தாரு. ஏதோ கம்பெனி வைக்கறதுக்காகக் கேட்குறாங்க. ஆனா, ஏக்கரு 10 லட்சத்துக்கு மேலன்னா, வேண்டாம்னு சொல்றாங்க... என்ன பண்ணலாம்..?” என போனில் என் மைத்துனர் சொல்லிக்கொண்டிருந்தார்.

அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, “வந்த விலைக்கு தள்ளிவிடுங்க...” என என் மனைவி சைகை காட்டினார்.

“மச்சான், வாங்கின விலைக்கும், அந்த நிலத்துக்குச் செலவு பண்ணதையும் கூட்டிக் கழிச்சு கணக்குப் போட்டுப் பார்த்தா மூணு நாலு பர்சன்ட்கூட தேறாதுபோல இருக்கே... நான் கொஞ்சம் யோசிச்சுட்டு போன் பண்றேன்” எனச் சொல்லிவிட்டு போனை வைத்தேன்.

என் மனைவியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. “அந்தத் தொல்லை பிடிச்ச நிலத்தை தொலைச்சுக் கட்டினா பத்தாதாக்கும். இதுல லாபம் வேற கொட்டணுமா...” என்றாள்.

“பத்து வருஷத்துக்கு முந்தி அந்த நிலத்தை வாங்க வச்சதே நீதானே...” என மனதுக்குள் முணுமுணுத்தபடியே மெளனமாக மொட்டைமாடிக்குச் சென்று, வானத்தைப் பார்த்தேன். முழு நிலா பளிச்சென பிரகாசித்தது. இதே போன்ற ஒரு பெளர்ணமி தினத்தில்தான் விடுமுறைக்காக என் மைத்துனர் வீட்டுக்குப் போயிருந்தோம். தென் மாவட்டம் ஒன்றில் மலையடிவார கிராமம் அது.

“மாப்ளே... இந்த நகர வாழ்க்கையே நரக வாழ்க்கையப்பா... எப்படித்தான் சென்னையில காலம் தள்ள முடியுதோ உனக்கு. பேசாம கொஞ்சம் நிலத்தை நம்ம ஊருப் பக்கமா வாங்கிப் போடு. உங்கிட்ட பணம் இருக்கு. எங்கிட்ட உழைப்பு இருக்கு. ஒரு 20 ஏக்கரா அந்த மலைக்குன்று அடிவாரத்துல விலைக்கு வருதாம். வாங்கினா ஒரு பண்ணைய உருவாக்கிடலாம். நமக்கிட்ட விளையற பொருளை வேல்யூ ஆட் பண்ணி வெளிநாட்டுக்குக்கூட அனுப்பலாம். ஒருகட்டத்துல நீ வேலைய விட்டுட்டு, பண்ணைய பார்த்துக்க வந்துடலாம்” என்றார் மைத்துனர்.

‘‘லட்சங்களில் பெருகிய மியூச்சுவல் ஃபண்ட்... நஷ்டத்தில் தள்ளிய பண்ணை நிலம்... கோடிகளை இழந்த கொடுமை!’’

“ஆமாய்யா... அது பொன்னு விளையற பூமியாச்சே... அது கிடைக்க கொடுப்பினை வேணும்ய்யா...” என்றார் மாமனார்.

“அந்த சிவன் கோயில ஒட்டி இருக்க நிலத்தையா சொல்றீக... அதுக்கு மூணு நாலு பேரு மோதுறாங்களாமே... நமக்கு கிடைக்குமான்னு தெரியலையே...” என்றார் என் மாமியார்.

“அது நம்ம காரவூட்டுக்காரர் நிலமப்பா... கணக்குப்புள்ள ஒத்த வார்த்தை சொன்னா போதும், அவர் மாத்துப் பேச்சு பேசமாட்டாரு...” என்றார் என் சின்ன மாமனார்.

அவர்கள் பேசுவதை எல்லாம் நான் மெளனமாகக் கேட்டுக்கொண்டிருந்தேன். எனக்கு உண்மையாகவே நிலம் வாங்கும் ஐடியா துளியும் இல்லை. ஆனால், எல்லோரும் நான் நிலம் வாங்க ஒப்புக்கொண்டுவிட்டதாக முடிவே செய்துவிட்டார்கள்.

“மாப்ளே... ஒரு வார்த்தை உம்முன்னு சொல்லுங்க. பொழுது விடிஞ்சதும் கணக்குப் பிள்ளைகிட்ட ஒரு வார்த்தை சொல்லி வச்சிடலாம்...” என்ற மைத்துனர், “தங்கச்சி... மாப்ளைகிட்ட எடுத்துச் சொல்லும்மா...” என்று என் மனைவியையும் உசுப்பிவிட்டார்.

“மண்ணுல போட்ட காசும் பொன்னுல போட்ட காசும் வீணாவா போவப்போகுது... அதான் இத்தனை பேரு சொல்றாங்களே...” என்றாள் என் மனைவி.

நான் பதில் சொல்லாமல், யோசிக்க ஆரம்பிக்கவே, ‘‘என்ன யோசனை கிடக்கு... எப்ப பார்த்தாலும் நாலு சுவத்துக்குள்ள அடைஞ்சு கிடக்குற வாழ்க்கை ஒரு வாழ்க்கை யாக்கும். நிலத்தை பேசி முடிங்க. பண்ணை வேலைய அண்ணன் பார்த்துக்கும்.

நாம வாரம் ஆனாக்கும் காருல இங்கே வந்துடலாம். பண்ணை வரவு செலவப் பார்த்துட்டு ஞாயிறு கிளம்பி சென்னைக்குப் போயிடலாம். நல்ல நேரம் வந்துச்சுன்னா அண்ணன் சொல்றாப்புல முழுநேரமா பண்ணைய கவனிக்க வந்துடலாமே...’’ என்று படபடத்தாள் என் மனைவி.

“சரி பார்க்கலாம்...” என்று நான் சொன்னது தான் தாமதம், “மாப்ள சரின்னு சொல்லிட்டாருப்பா... காலையில வெடக்கோழிய அடிச்சு விருந்து வைங்கப்பா...” என்று சொல்லிவிட்டு சத்தமாகச் சிரித்தார் சின்ன மாமனார்.

சில நேரங்களில் நல்ல விஷயங்களும் சரி, கெட்ட விஷயங்களும் சரி... நம் கட்டுப்பாட்டை மீறி நடந்துவிடும். அப்படித்தான் பண்ணை வாங்கும் முடிவும் என் சம்மதம் இல்லாமலே ஓவர்நைட்டில் எடுக்கப்பட்டுவிட்டது.

“சரிப்பா... நம்ம மாப்ள வாங்கறார்ன்னு சொன்னதுக்கு அப்புறம் நான் தட்டிக்கழிக்க முடியுமா... காரவூட்டுக்காரர்கிட்ட நான் கறாரா சொல்லிவச்சுடுறேன். நாம சொல் லிட்டா அவரு தட்ட மாட்டாருல்ல...” எனக் கணக்குப்பிள்ளை பில்டப் கொடுக்க, என் மைத்துனர் அவருக்கு ஒரு கும்பிடு போட்டார்.

“மாப்ளே... அதான் ஐயா சொல்லிட்டாரே. சென்னைக்குப் போனதும் பணத்தைப் புரட்டிக்கிட்டு வாப்பா... அமாவாசை அன்னைக்கு நிலத்தைப் பதிவு செஞ்சுடலாம்’’ என்று சொல்ல, நான் என்னையும் அறியாமல் தலையை ஆட்டினேன்.

நான் பணம் சம்பந்தப்பட்ட எந்த முடிவை எடுப்பது என்றாலும், என் நண்பரைக் கேட்டுத்தான் எடுப்பேன். என் அலுவலக சீனியரான அவர், என்மீது தனிப் பிரியம் கொண்டவர். அவருடைய ஆலோசனையின் படிதான் நான் பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் போன்ற முதலீடுகளைச் செய்து வருகிறேன். என்னைப் பொறுத்தவரை அவர் சொன்னால், அது சரியாக இருக்கும் என நம்புகிறேன். சென்னை வந்ததும் அவரிடம் பேசினேன்.

‘‘தம்பி, பண்ணை நிலம் வாங்குவது பலருக்குப் பெருமையான விஷயம் ஆகிவிட்டது. காரணம், எதிர் காலத்துல நிலம் வச்சிருக் கிறவன்தான் பெரிய கோடீஸ் வரனா இருப்பான்னு நிறைய பேர் பொத்தாம் பொதுவா சொல்றாங்க. அது நிஜம்தான். ஆனா, அது யாருக்கு சரிப்பட்டு வரும், யாருக்குச் சரிப்பட்டு வராதுன்னு பார்க்கறது இல்ல. என்னைப் பொறுத்தவரை உனக்கு இது சரிப்பட்டு வராதுப்பா... 600 கிலோமீட்டருக்கு அந்தப் பக்கம் நிலத்தைப் பல லட்சம் போட்டு வாங்கிட்டு, பராமரிக்க முடியாது. மத்தவுங்களை மொத்தமா நம்புறதும் சரியா வராது. இருக்கற முதலீட்டை கரைச்சிட வேண்டாம்’’ என்றார்.

நான் நிலம் வாங்க வேண்டாம் என முடிவு செய்துவிட்டு வீட்டுக்கு வந்தேன். ஆனால், மைத்துனர் போன் செய்து, ‘‘மாப்ளே... இன்னைக்கு நாள் நல்லா இருந்துச்சுன்னு அட்வான்ஸ் 3 லட்சம் ஏற்பாடு பண்ணி கொடுத்துட்டேன். ஏக்கர் 7 லட்சம்னு பேசிருக்கோம் மாப்ளே...’’ என்று சொல்ல, எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு களை எல்லாம் எடுத்துப் போட்டுதான் அந்த நிலத்தை வாங்கினேன். இதோ... 10 வருடங்கள் ஆகிவிட்டன. அந்த முதலீடுகளை அப்படியே தொடர்ந்திருந்தால் இப்போது இரண்டு மூன்று கோடி ரூபாய்க்கு மேல் சேர்த்திருக்க முடியும்.ஆனால், நிலம் வாங்கி, நினைத்தபடி பண்ணை அமைக்கவும் முடியவில்லை. அரைகுறையாக அமைத்த பண்ணையால் மைத்துனர் பலன் அடைந்த அளவுக்குக்கூட, நான் பலன் அடையவில்லை. இதோ, இப்போது விற்பதற் காக அல்லாடிக்கொண்டிருக்கிறேன்.

எப்போதுமே நம்மை மீறி எடுக்கப்படும் முடிவுகளுக்கு கறாராக ‘நோ’ சொல்லிவிடுவது நல்லது!’’

    ‘லாபம்’ மூலம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டைத் தொடங்க:
  • bit.ly/labham-money லிங்க் க்ளிக் செய்து எங்களின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ‘Hi’ என்று மெசேஜ் செய்யவும்.
  • அல்லது, ஃபோனில் அழைக்கவும்96002 96001
  • அல்லது நேரடியாக முதலீட்டைத் தொடங்க,my.labham.money பேஜில் லாகின் செய்யவும்.