மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு: பெரு நகரங்களுடன் போட்டி போட்டு வளரும் சிறு நகரங்கள்!

இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு கடந்த சில ஆண்டுகளில் அட்டகாசமான வளர்ச்சியை அடைந்துள்ளது. ஆனால், பெரிய நகரங்களை முந்தும் அளவுக்கு சிறிய நகரங்கள், சிற்றூர்களிலும் மியூச்சுவல் ஃபண்ட் வளர்ச்சி பட்டையை கிளப்பியுள்ளது. சொல்லப்போனால், இப்போது மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் சிறு நகரங்களை சேர்ந்தவர்கள்தான்!

கொரோனா பரவத் தொடங்கியபோது 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் லாக்டவுன் போடப்பட்டது. இதேபோல, உலகெங்கும் பல நாடுகள் லாக்டவுன் போட்டன. இதனால், பங்குச் சந்தைகள் பயங்கரமான வீழ்ச்சி அடைந்தன. இனி பங்குச் சந்தை எப்போது எழுமோ என முதலீட்டாளர்கள் யோசித்துக் கொண்டிருந்தபோது, கிடுகிடுவென பங்குச் சந்தை எழுந்து பழைய உச்சங்களை தாண்டியது.

அப்போது ஓடத் தொடங்கிய பங்குச் சந்தை ஏற்றம் கடந்த செப்டம்பர் மாதம் வரை ஓயவில்லை. இந்த வளர்ச்சியால் இந்திய சிறு முதலீட்டாளர்களும், குடும்பங்களும் தங்களது சேமிப்பை மியூச்சுவல் ஃபண்டுகளில் மேற்கொள்ளத் தொடங்கினார்கள். போட்ட பணமும் வளர வளர மியூச்சுவல் ஃபண்டுகள் சிற்றூர்களிலும் பிரபலமடைந்தன. வங்கிகளில் கிடைக்கும் வட்டி மிகக் குறைவு. இந்தியக் குடும்பங்கள் தங்களது சேமிப்புக்கு அதிக வருமானம் வேண்டும் என ரிஸ்க் எடுக்கத் தயாராகி, மியூச்சுவல் ஃபண்டுகளில் சேமிக்கத் தொடங்கினர்.

இதன் விளைவு என்ன தெரியுமா? மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு வரும் முதலீடுகள் டி30, பி30 என இரு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. டி30 என்பது இந்தியாவின் முதல் 30 நகரங்கள். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சென்னை, கோவை ஆகிய நகரங்கள் இருக்கின்றன. இந்த டாப் 30 நகரங்களைத் தவிர்த்து மீதமுள்ள ஒட்டுமொத்த இந்தியாவும் பி30 வகையில் வரும். கடந்த சுமார் ஒரு ஆண்டு காலத்தில், பெரிய நகரங்களை விட பி30 பகுதிகள் மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி முதலீட்டில் சிறப்பாக வளர்ச்சி அடைந்துள்ளன. 2023-ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2024-ம் ஆண்டு செப்டம்பர் வரையிலான ஒரு ஆண்டு காலத்தில் டி30 பெரு நகரங்களில் மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி கணக்குகளின் எண்ணிக்கை 28 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதே ஒரு ஆண்டு காலகட்டத்தில் பி30 பகுதிகளில் எஸ்.ஐ.பி கணக்குகள் 42% வளர்ச்சி அடைந்துள்ளது. செப்டம்பர் மாத இறுதியில் பி30 நகரங்களில் உள்ள எஸ்.ஐ.பி கணக்குகளின் எண்ணிக்கை 4.21 கோடி. ஆனால், டி30 பெரு நகரங்களில் இருந்த எஸ்.ஐ.பி கணக்குகளின் எண்ணிக்கை 3.84 கோடி மட்டுமே. ஆக, எண்ணிக்கையிலும் பெரு நகரங்களை சிறு நகரங்கள் முந்திவிட்டன.

தற்போது ஒட்டுமொத்த எஸ்.ஐ.பி கணக்குகளில் பி30 பகுதிகளே பெரும்பான்மை வகித்து வருகின்றன. இந்த மாற்றத்துக்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. பொதுவாக பங்குச் சந்தை ஏற்றப்போக்கில் இருக்கும்போது மக்களை ஈக்விட்டி சொத்து வகை வெகுவாக ஈர்ப்பது வழக்கம்தான். ஆனால், மியூச்சுவல் ஃபண்டுகள் பற்றிய விழிப்புணர்வு அதிரித்திருப்பதும் மற்றொரு காரணமாக இருக்கிறது.

மேலும், சிறு நகரங்களில் மியூச்சுவல் ஃபண்டு விநியோகம் வளர்ச்சி அடைந்துள்ளது. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் கூட சிறிய ஊர்களில் விளம்பரம் செய்கின்றன; மக்களை அழைத்து மியூச்சுவல் ஃபண்ட் பற்றிய நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. இதுமட்டுமல்லாமல், பிரபல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் சிறு நகரங்களில் அலுவலகங்களைத் தொடங்கி வருகின்றன. இதனால், சிறு நகரங்களை சேர்ந்த மக்களுக்கும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வருவதாக மியூச்சுவல் ஃபண்ட் துறையினர் கூறுகின்றனர்.

என்னதான் பி30 பகுதிகளில் மியூச்சுவல் ஃபண்ட் கணக்குகளின் எண்ணிக்கை அதிக வளர்ச்சி அடைந்தாலும், மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு வரும் முதலீடுகளில் இன்னும் டி30 பெரு நகரங்களே அதிக பங்கு வகிக்கின்றன. உதாரணமாக, கடந்த செப்டம்பர் மாதம் பி30 பகுதிகளில் இருந்து வந்த எஸ்.ஐ.பி முதலீடுகள் 8,127 கோடி ரூபாய். ஆனால், டி30 நகரங்களில் இருந்து வந்த முதலீடுகள் 11,872 கோடி ரூபாய். என்ன இருந்தாலும், சிறு நகரங்களைச் சேர்ந்த மக்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்குள் வருவதே மிகப் பெரிய மாற்றம்தான்!

    ‘லாபம்’ மூலம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டைத் தொடங்க:
  • bit.ly/labham-money லிங்க் க்ளிக் செய்து எங்களின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ‘Hi’ என்று மெசேஜ் செய்யவும்.
  • அல்லது, ஃபோனில் அழைக்கவும்96002 96001
  • அல்லது நேரடியாக முதலீட்டைத் தொடங்க,my.labham.money பேஜில் லாகின் செய்யவும்.