மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகளை விற்பது, அடமானம் வைப்பது... பணத் தேவைக்கு எது பெஸ்ட்?

சில முதலீடுகளை பணத் தேவைக்கு விற்பதைவிட, அடமானம் வைப்பது பல வகையில் லாபகரமாக இருக்கும். ஆண்டாண்டுக் காலமாக தங்க நகை, மனை, வீடு ஆகியவை பணத் தேவைக்கு விற்பனை செய்யப்படுவதைவிட அடமானம் வைக்கப்பட்டு வருகிறது. இப்போது இந்தப் பட்டியலில் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகளும் இணைந் திருக்கின்றன.
நான்கு மணி நேரத்தில் கடன்...
இன்றைய டிஜிட்டல் உலகில் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகளை அடமானம் வைத்து கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்தில் பணம் பெற்றுக்கொள்ள முடியும். மேலும், கடன் தகுதியை 15 நொடிகளில் பரிசோதித்துக்கொள்ள முடியும். டீமேட் கணக்கில் யூனிட்டுகள் இருந்தால் விரைந்து கடன் கிடைக்கும்.
வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள், மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனங்கள் பலரும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு கடன் வழங்கி வருகின்றன. இந்தக் கடனுக்கான வட்டி 10% முதல் 15% ஆக உள்ளது. சராசரி வட்டி சுமார் 10.5% ஆக உள்ளது. எவ்வளவு காலத்தில் கடனை திரும்பச் செலுத்துகிறோமோ, அதற்கு ஏற்ப வட்டி இருக்கும். உதாரணமாக, இந்தக் கடனை 24 மாதங்களில் அடைக்க விரும்பினால் ஆண்டுக்கு 12%, 18 மாதம் என்றால் 12.5%, 12 மாதம் என்றால் 13%, 6 மாதம் என்றால் 13.5% வட்டி கட்ட வேண்டும் என்பதுபோல் இருக்கும். இது நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடும்.
எவற்றுக்கெல்லாம் கடன் கிடைக்கும்?
வீட்டுத் தேவைகள், பிள்ளைகளின் கல்வி, கல்யாணச் செலவுகள், மருத்துவச் செலவுகள், சுற்றுலா செலவுகள் என அனைத்துச் செலவுகளுக்கும் தனிநபர்கள் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகளை அடமானம் வைத்து கடன் பெற்றுக்கொள்ளலாம். வணிகம் செய்பவர்கள், அவர்களின் பல்வேறு நிதித் தேவைகள், நடைமுறை மூலதனச் செலவு எனப் பலவற்றுக்கும் மியூச்சுவல் ஃபண்ட் அடமானக் கடன் பெற்றுக்கொள்ள முடியும்,
இந்தக் கடனை குறுகிய காலம், நடுத்தரக் காலம், நீண்ட காலம் என அனைத்து நிதித் தேவைகளுக்கும் பெற்றுக்கொள்ள முடியும்.
யாருக்கு இந்தக் கடன் கிடைக்கும்..?
இந்தக் கடனை மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்திருக்கும் அனைவரும் பெறலாம். கிரெடிட் ஸ்கோர் இவ்வளவுக்கு மேல் இருக்க வேண்டும் என எந்த நிபந்தனையும் கிடையாது.
மேலும், ஒருவரின் வேலையின் தன்மை இந்தக் கடனைப் பெறத் தடையாக இருக்காது. மேலும், குறைந்த பட்ச சம்பளம் இவ்வளவு இருக்க வேண்டும் என்கிற கட்டுப்பாடோ, சம்பள ஆதாரமோ, வங்கிக் கணக்கின் அறிக்கையோ தேவையில்லை.
யாருக்கு இந்தக் கடன் கிடைக்காது..?
மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகளை அடமானம் வைத்து வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ-க்கள்) கடன் வாங்க முடியாது. குழந்தைகள் பெயரில் இருக்கிற மியூச்சுவல் ஃபண்ட் மைனர் கணக்கில் கடன் வாங்க முடியாது. வருமான வரி சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட் திட்டமான இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகளை அதன் லாக்இன் காலத்துக்குள் அடமானம் வைத்து கடன் வாங்க முடியாது.
எவ்வளவு கடன் கிடைக்கும்?
மியூச்சுவல் ஃபண்ட் வகைக்கு ஏற்ப கடன் அளவு இருக்கும். பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகள் (Equity Mutual Funds) என்றால், அதன் மதிப்பில் 50% வரையிலானான தொகை கடனாகக் கிடைக்கும். கடன் ஃபண்டுகள் (Debt Funds) என்கிறபட்சத்தில், மதிப்பில் 80% வரைக்கும் கடன் கிடைக்கும். லிக்விட் மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு, அதன் மதிப்பில் 90 சதவிகிதம் வரைக்கும் கடன் கிடைக்கும். ஈக்விட்டி ஃபண்டுகள் என்கிறபோது அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரைக்கும், டெப்ட் ஃபண்டுகளுக்கு ரூ.5 கோடி வரைக்கும் கடனாகப் பெற்றுக்கொள்ள முடியும். இது நிறுவனத்துக்கு நிறுவனம் சிறிது மாறு படும். குறைந்தபட்ச கடன் தொகை ரூ.25,000 ஆகும். இதுவும் நிறுவனத்தைப் பொறுத்து மாறுபடும்.
இந்த அடமானக் கடனை மாதத் தவணை (EMI) அடிப்படையில் கட்டி வரலாம். இடையில் அதிக தொகை கிடைத்தால் அதை மொத்தமாக கட்டவோ, பகுதி பணமாகவோ கட்டவோ முடியும், மேலும், கடனை முன்கூட்டியே அடைக்க கட்டணம் எதுவும் இல்லை: எப்போது வேண்டு மானாலும் கடனை அடைத்துக் கொள்ளலாம். வாங்கிய கடனை அடைத்துவிட்டால், அடமானம் வைத்த அத்தனை யூனிட்களும் திருப்பி அளிக்கப்படும்.
எப்படி விண்ணப்பம் செய்வது..?
மியூச்சுவல் ஃபண்ட் அடமானக் கடன் கொடுக்கும் நிறுவனங்களின் இணையதளத்தில் பான் எண், செல் நம்பர், இ-மெயில் உள்ளிட்ட விவரங் களைக் கொடுத்து கடனுக்கு விண்ணப் பிக்கலாம். மேலும், டிஜிட்டல் கே.ஒய்.சி செய்து, உடனடியாகக் கடன் பெற்றுக்கொள்ள முடியும்.
மியூச்சுவல் ஃபண்ட் அடமானக் கடன் ஏன்..?
மியூச்சுவல் ஃபண்ட் அடமானக் கடனை ஏன் தேர்வு செய்ய வேண்டும் என்பதற்கான முக்கிய காரணங்களைப் பார்ப்போம்.
1. தனிநபர் கடன் என்றால் வட்டி 18% - 24% ஆகவும், கிரெடிட் கார்டு கடன் என்றால் வட்டி 36% - 45% ஆகவும் உள்ள நிலையில் மியூச்சுவல் ஃபண்ட் அடமானக் கடன் வட்டி குறைவாகும். மேலும், பயன்படுத்தும் கடன் தொகைக்கு மட்டுமே வட்டிக் கட்டினால் போதும்.
2. ஓவர் டிராஃப்ட் வசதி உள்ளதால் தேவைப்படும் அளவுக்கு மட்டும் பணத்தை எடுத்துச் செலவு செய்து கொள்ளலாம்.
3. கடன் பரிசீலனை டிஜிட்டல் வழியில் நடப்பதால் கிட்டத்தட்ட எந்த ஆவணமும் தேவையில்லை.
4. மாத வட்டியைக் கட்டி வரும் நிலையில் கடனை எப்போது வேண்டுமானாலும் முடித்துக்கொள்ள முடியும்.
5. கடனை முன்கூட்டியே முடிப்பதற்கு அபராதம், கட்டணம் எதுவும் கிடையாது,
6. கடனைக் குறைந்தபட்சம் இத்தனை ஆண்டுகளுக்குத் தொடர வேண்டும் என்கிற எந்த நிபந்தனையும் கிடையாது என்பதால் கடனை எப்போது வேண்டுமானாலும் முடித்துக்கொள்ளலாம்.
7. பங்குச் சந்தை, கடன் சந்தை, லிக்விட் ஃபண்ட் என அனைத்து வகை ஃபண்டுகளுக்கும் அடமானக் கடன் கிடைக்கும் என்பதால் அனைத்து முதலீட்டாளர்களும் இந்தக் கடன் வசதியைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்,
8. மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்கள் அடமானம் வைக்கப்பட்டிருந்தாலும் அதன் முழு உரிமை முதலீட்டாளருக்கு உள்ளது. டிவிடெண்ட் உள்ளிட்ட முதலீட்டின் லாபம் முழுக்க முதலீட்டாளருக்கு கிடைத்துக் கொண்டிருக்கும்.
9. மியூச்சுவல் ஃபண்ட் கடன் கணக்கை ஆன்லைன் மூலம் எப்போது வேண்டுமானாலும் பார்வையிட முடியும்.
10. பொதுவாக இந்தக் கடனை 1 - 3 ஆண்டுகளில் திரும்பக் கட்ட வேண்டும். மேலும், சுலபமாகக் கடன் காலத்தை நீட்டித்துக்கொள்ள முடியும்.
இப்படிச் செய்வது மூலம் உங்களின் புதிய நிதித் தேவை நிறைவேறும். கூடவே கடன் அடைப்பட்டவுடன் ஏற்கெனவே திட்டமிட்டிருந்த நிதித் தேவைக்கும் பணம் கிடைக்கும்.
இனி பணத் தேவைக்கு மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகளை விற்க வேண்டாம்; அடமானம் வைத்துக்கொள்ளலாம். கடன் முடிந்ததும் யூனிட்டுகள் திரும்பக் கிடைக்கும்போது முதலீடு மேலும் வளர்ந்திருப்பதைக் காண முடியும்.
- ‘லாபம்’ மூலம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டைத் தொடங்க:
- bit.ly/labham-money லிங்க் க்ளிக் செய்து எங்களின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ‘Hi’ என்று மெசேஜ் செய்யவும்.
- அல்லது, ஃபோனில் அழைக்கவும்96002 96001
- அல்லது நேரடியாக முதலீட்டைத் தொடங்க,my.labham.money பேஜில் லாகின் செய்யவும்.