ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கான பணம்... எதில் முதலீடு செய்தால் அதிக லாபம்?

நம்மில் பலர் அவசரத் தேவைக்கென குறிப்பிட்ட தொகையை வங்கி சேமிப்புக் கணக்கில் வைத்திருப்போம். இதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் இருக்கலாம். ஒன்று, விரைவாகப் பணமாக்குவது; அடுத்து, பாதுகாப்பாகப் பணத்தை வைத்திருப்பது.
ஆனால், இந்த முதலீட்டுக்கு ஆண்டுக்கு 2.75% - 3% மட்டுமே வட்டி கிடைக்கும். அதே நேரத்தில் இந்தப் பணத்தை அவசரத் தேவைக்குப் பயன்படுத்துவதுடன், அதிக ரிஸ்க் இல்லாமல் முதலீடு செய்து, அதிக வருமானமும் பெற முடியும். இதற்கான திட்டங்கள் என்னென்ன?
வங்கி, தபால் அலுவலக தொடர் வைப்புத் திட்டம்...
வங்கிகள் மற்றும் தபால் அலுவலகத்தில் தொடர் வைப்புத் திட்டம் (Recurring Deposit - RD) இருக்கிறது. இதற்கு வங்கி சேமிப்புக் கணக்கைவிட இரு மடங்கு வட்டி வருமானம் கிடைக்கும். இந்த வட்டி வருமானம், முதலீட்டுக் காலத்தைப் பொறுத்து மாறுபடும். பொதுவாக, ஓராண்டுக்கு மேற்பட்ட ஆர்.டி-க்கு 6 சதவிகிதத்துக்குமேல் வட்டி கிடைக்கும். தபால் அலுவலக ஆர்.டி திட்டம் ஐந்து ஆண்டுக் காலம் முதிர்வைக் கொண்டது. அதற்கு தற்போதைய நிலையில், ஆண்டுக்கு 6.7% வட்டி வழங்கப்படுகிறது.
அதிக வட்டிலான சேமிப்புக் கணக்கு...
தனியார் வங்கிகள், சிறு வங்கிகள், குறு வங்கிகள் ஆகியவை சேமிப்புக் கணக்குகளுக்கு ஆண்டுக்கு சுமார் 6% முதல் 7% வரை வட்டியைக் கொடுத்து வருகின்றன. இது போன்ற வங்கிகளில் குறுகிய காலத் தேவைக்கு உள்ள பணத்தைப் போட்டு வைக்கலாம். வங்கி சேமிப்புக் கணக்குகளைப் பொறுத்த வரை, ரூ.5 லட்சம் வரைக்கும்தான் டெபாசிட்டுக்கு இன்ஷூரன்ஸ் இருக்கிறது. எனவே, இதுபோன்ற வங்கிகளில் அதிக பணத்தைப் போட்டு வைக்க வேண்டாம்.
வங்கி சேமிப்புக் கணக்கில் இருக்கும் பணம். ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் செல்லும்போது அது ஃபிக்ஸட் டெபாசிட்டாக மாற்றிக்கொள்ளும் திட்டத்தைப் பெரும்பாலான வங்கிகள் ஃப்ளெக்ஸி டெபாசிட் திட்டம் என்கிற பெயரில் வைத்திருக்கின்றன. உதாரண மாக, ஒருவரின் வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச பராமரிப்புத் தொகை ரூ.10,000 என வைத்துக்கொள்வோம். இந்தத் தொகைக்கு மேல் அதிகமாக இருக்கும் தொகை ஃபிக்ஸட் டெபாசிட் கணக்குக்குச் சென்றுவிடும். இந்த ஃபிக்ஸட் தொகைக்குக் கூடுதலாக டெபாசிட்டுக்குரிய வட்டி வழங்கப்படும்.
எப்படிச் செயல்படுகிறது..?
ஒருவரின் வங்கி சேமிப்புக் கணக்கில் ரூ.35,000 இருக்கிறது. அவர் தேவைக்கு வங்கி சேமிப்புக் கணக்கில் இருந்து ரூ.20,000 எடுத்துவிட்டால் வங்கி சேமிப்புக் கணக்கில் பணம் ரூ.15,000-ஆக குறைந்துவிடும். இதில் ரூ.10,000 சேமிப்பு கணக்கிலும் ரூ.5,000 ஃபிக்ஸட் டெபாசிட் கணக்கிலும் இருக்கும். இந்நிலையில், எவ்வளவு காலத்துக்கு ரூ.20,000 ஃபிக்ஸட் டெபாசிட் கணக்கில் இருந்ததோ, அதற்குரிய அதிக வட்டி வாடிக்கையாளருக்குக் கிடைக் கும். இதன் மூலம் வங்கி சேமிப்புக் கணக்கில் இருக்கும் பணத்தை அவசரத் தேவைக்கும் பயன்படுத்திக்கொள்ள முடியும். கூடுதல் வட்டி வருமானமும் பெற முடியும்.
ஓராண்டுக் காலம் வங்கி சேமிப்புக் கணக்கில், குறிப்பிட்ட தொகை ஃபிக்ஸட் டெபாசிட்டாக இருந்தால், அதற்கு ஆண்டுக்கு சுமார் 7% வட்டி கிடைக்க வாய்ப்புள்ளது எனவே, உங்களுடைய சேமிப்புக் கணக்கை ஒரே கல்லில் இரு மாங்காய் என்பதாக மாற்றிக் கொள்ளுங்கள். இதற்கு வங்கிக்கு கோரிக்கை வைக்க வேண்டும். ஆன்லைன் மூலம்கூட இப்படி மாற்றிக்கொள்ள முடியும்.
லிக்விட் மியூச்சுவல் ஃபண்ட்...
இது கடன் சந்தை மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ஒரு வகை ஆகும்; குறைவான ரிஸ்க் கொண்டது. இந்த ஃபண்டுகளில் திரட்டப்படும் நிதி, 90 நாள்களில் முதிர்வடை யும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகிறது. தற்போது நிலையில், ஆண்டுக்கு சுமார் 7% - 7.5% வருமானம் அளித்து வருகிறது. அதாவது, வங்கி சேமிப்புக் கணக்கைவிட இரு மடங்கு வருமானம் கிடைக்கிறது.
மேலும், லிக்விட் ஃபண்டில் பணத்தை எடுப்பது மிக எளிது. இன்று மதியம் ஒரு மணிக்குள் யூனிட்டுகளை விற்பனை செய்தால், மறுநாள் காலை 11 மணிக்குள் வங்கிக் கணக்குக்குப் பணம் வந்துவிடும். இதுவே ஏ.டி.எம் கார்டு வசதி கொண்ட லிக்விட் ஃபண்டில் முதலீடு செய்திருந்தால், 50%தொகை அல்லது ரூ.50,000 வரை ஏ.டி.எம் கார்டு மூலமே எடுத்துக்கொள்ளலாம் இந்த கார்டைக் கொண்டு பொருள்களை வாங்கவும் முடியும்.
அல்ட்ரா ஷார்ட் டேர்ம் டெப்ட் ஃபண்ட்...
இதுவும் கடன் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங் களில் ஒன்றுதான். இந்த ஃபண்டில் முதலீட் டாளர்களிடமிருந்து திரட்டப்படும் பணம், ஓராண்டு வரைக்குமான முதிர்வுக் காலம் கொண்ட கடன் பத்திரங்களின் முதலீடு செய்யப்படுகிறது. இந்த ஃபண்ட் மூலம் ஆண்டுக்கு சுமார் 7.5% - 8% வருமானம் கிடைத்து வருகிறது. இந்தப் ஃபண்டுகளை விற்கும்போது அதிகபட்சம் 3 தினங்களுக்குள் வங்கிக் கணக்குக்குப் பணம் வந்துவிடும்.
வருமான வரி எவ்வளவு?
பழைய வருமான வரி முறையில், வங்கி சேமிப்புக் கணக்கில் நிதியாண்டில் ஒருவருக்கு ரூ.10,000 வரைக்கும் வட்டி வருமானத்துக்கு வரி இல்லை. அதற்கு மேற்பட்ட தொகைக்கு ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் வருகிறாரோ, அதற்கேற்ப வரியைக் கட்ட வேண்டும்.
ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி வருமானத்துக்கு அந்தந்த நிதியாண்டில் ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் வருகிறாரோ அதற்கேற்ப வரி கட்ட வேண்டும். ஆர்.டி முதலீட்டுக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் போலவே வருமான வரியைக் கட்ட வேண்டும்.ஆனால், லிக்விட் ஃபண்ட் மற்றும் அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டுகளில் எப்போது யூனிட்டுகளைப் பெற்று பணமாக்குகிறோமோ, அப்போது வருமான வரியைக் கட்ட வேண்டும். அதுவும் மூலதன ஆதாயத்துக்கு மட்டும்தான் வரி கட்ட வேண்டும். இந்த வரி ஒருவர் எந்த வருமான வரி வரம்பில் வருகிறாரோ, அதற்கேற்ப இருக்கும். அந்த வகையில், ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட லிக்விட் மற்றும் ஷார்ட் டேர்ம் ஃபண்ட் திட்டங்களில் வருமான வரியைக் குறைவாகக் கட்ட வேண்டி இருக்கும். அதாவது, ஒருவர் ரூ. 1 லட்சத்தை ஃபிக்ஸட் டெபாசிட்டிலும், ரூ.1 லட்சத்தை லிக்விட் ஃபண்டிலும் முதலீடு செய்கிறார். இந்த இரண்டுக்கும் 7% என்கிற அளவில் வருமானம் கிடைத்தால், ஃபிக்ஸட் டெபாசிட்டில் ரூ.2,100 வருமான வரியைக் கட்டும் நிலையில் கடன் ஃபண்டுகளில் ரூ.147-தான் வரியைக் கட்ட வேண்டி வரும். அவசர காலத் தேவைக்கான பணத்தைக் குறுகிய கால முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்யுங்கள். அதிலும் அதிக தொகை முதலீடு செய்யக் கூடாது. ஒருவரின் குடும்ப மாத செலவைப்போல் சுமார் ஆறு மடங்கு தொகையை மட்டும் இது போன்ற குறுகிய முதலீட்டுத் திட்டங்களில் வைத்தால் போதும். அதற்குமேல் வைத்திருப்பது சரியான முடிவல்ல!
- ‘லாபம்’ மூலம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டைத் தொடங்க:
- bit.ly/labham-money லிங்க் க்ளிக் செய்து எங்களின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ‘Hi’ என்று மெசேஜ் செய்யவும்.
- அல்லது, ஃபோனில் அழைக்கவும்96002 96001
- அல்லது நேரடியாக முதலீட்டைத் தொடங்க,my.labham.money பேஜில் லாகின் செய்யவும்.