'அன்று 100 ரூபாய்க்கு அவமானப்பட்டேன்...இன்று மியூச்சுவல் ஃபண்டில் ரூ.5 கோடி!''- நாணயம் விகடன் வாசகர் அனுபவம்!

நாணயம் விகடனின் நீண்டகால வாசகர் நான். பல வருடங்களாக நாணயம் விகடன் படித்து வருவதால், முதலீடுகள் மீது அலாதி ஆர்வம் உண்டு. இன்று சரியான முறையில் முதலீட்டைச் செய்கிறேன் என்றால், அதற்கு முதல் காரணம் நாணயம் விகடன்தான். அந்தவகையில் நாணயம் விகடனை என்னுடைய முதலீட்டு குரு என்று சொல்வதில் எனக்குப் பெருமையே.

நான் 12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தேன். குடும்பச் சூழ்நிலையால் மேலே படிக்க முடியாமல் வேலையில் சேர்ந்தேன். என் முதல் சம்பளம் 450 ரூபாய். தங்குவதற்கு, உணவுக்கு 300 ரூபாய் பிடித்துக்கொள்வார்கள். இப்படியே இருந்துவிடக் கூடாது என்ற வைராக்கியத்தில் வேலை பார்த்துக் கொண்டே படிக்கத் தொடங்கினேன். தொலைதூர கல்வியிலேயே பி.காம், எம்.காம் முடித்தேன். அதனால், நான் வேலை செய்த கம்பெனியின் சென்னை அலுவலகத்துக்கு அக்கவுன்ட்ஸ் ஆபீஸ ராகப் பதவி உயர்வு பெற்றுச் சென்றேன்.

முதன் முதலாகப் பணிக்குச் சேர்ந்த புதிதில் ஒரு நெருக்கடியான சூழ்நிலை. அவசரமாக 100 ரூபாய் தேவைப்பட்டது. நெருங்கிய உறவினர் ஒருவரிடம் கேட்டேன். கடனாகப் பணம் தந்தவர், பணத்தோடு சேர்த்து, நான்கு பேர் மத்தியில் வைத்து எனக்கு ‘அறிவுரை’யும் தந்தார். சொல்லப்போனால், அவருக்கு எனக்கு பண உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை. அவர் பெரிய பணக்காரர் என்பதைக் காட்டி பெருமைப்படவும், என்னை அவமானப்படுத்தவும் ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டார். அவருடைய மன ஓட்டத்தை என்னால் உணர முடிந்தது.

அவருடைய சுடுசொற்கள் என் நெஞ்சுக்குள் ஆறாத தழும்புகளை ஏற்படுத்திவிட்டன. திரும்பத் திரும்ப என் நினைவில் வந்துபோன அந்த அவமானம்தான் என்னை சிங்கநடை போட்டு சிகரம் நோக்கிப் பயணிக்க வைத்தது.

அவரிடம் வாங்கிய அந்த 100 ரூபாய் கடன்தான் நான் கடைசியாக வாங்கிய கடன்! என் வாழ்நாளில் இனி எப்போதும் கடன் கேட்டு யார் வீட்டு வாசலிலும் நிற்கக் கூடாது என சபதம் எடுத்தேன். எனது சம்பளத்தில் முதல் செலவு சேமிப்பாக இருக்க வேண்டும் என உறுதி எடுத்தேன். ஆடம்பரப் பொருள் வாங்கி எப்போதுமே இ.எம்.ஐ வலையில் சிக்கக் கூடாது என தீர்மானித்துக் கொண்டேன். அதிக விலையுள்ள அத்தியாவசியப் பொருளை வாங்க வேண்டும் என்று முடிவெடுத்தாலும் பணம் சேர்த்துவிட்டு, பின்புதான் வாங்குவேன்.

ஆனால், கிரெடிட் கார்டை என்னைப் போல யாரும் உபயோகித்து இருக்கிறார்களா என எனக்குச் சந்தேகமே! கடன் அட்டையை லாபகரமாகப் பயன்படுத்தும் சிலரில் ஒருவன் நான். கிட்டத்தட்ட இருபது வருடங்களாக கிரெடிட் கார்டு உபயோகிக்கிறேன். இதுவரை ஒருமுறைகூட தாமதமான கட்டணமோ, வட்டியோ கட்டியது இல்லை. அதன் மூலம் கிடைக்கும் கேஷ்பேக் ஆஃபரை சரியாகப் பயன்படுத்திக்கொண்டுள்ளேன். இதுவரை வீட்டுக்குத் தேவையான பொருள்கள் பலவற்றையும் சலுகையைப் பயன்படுத்தி வாங்கியிருக்கிறேன்.

‘‘நீ வித்தியாசமான ஆளுப்பா... யார்கிட்டேயும் கடன் வாங்கக் கூடாதுன்னு பாலிசி வச்சிருக்க. அதே சமயத்துல கடன் அட்டைய கச்சிதமா யூஸ் பண்ணிக்கிற...’’ என நண்பர்கள் பலரும் ஆச்சர்யப்படுவார்கள்.

‘‘கிரெடிட் கார்டை இஷ்டத்துக்கு யூஸ் பண்ணிட்டு, அல்லாடி நிற்கிற ஆளுங்கள பார்த்திருக்கேன். ஆனா, இந்த விஷயத்துல நீ கில்லாடிப்பா...’’ என்று என் சீனியர் அடிக்கடி சொல்வார்.

பண நிர்வாகத்தில் மட்டுமல்ல, பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளைச் செய்வதில் நான் சூப்பர் என சட்டைக் காலரை தூக்கிவிட்டுக்கொள்வது உண்டு. சின்னச் சின்ன இலக்குகளுக்கும்கூட முதலீட்டை சரியாகத் திட்டமிட்டு செய்துவிடுவேன்.

வாழ்க்கையில் எனக்கு ஒரு திருப்பு முனையை உண்டாக்கிய தருணம் வந்தது. ஆம். துபாய் செல்லும் வாய்ப்புதான் அது. துபாயில் ஒரு கம்பெனியில் அக்கவுன்டன்ட் ஆக பணியைத் தொடங்கினேன். துபாய்க்கு இடம் மாறிய புதிதில் எனக்கு குறைவான சம்பளம்தான். மனைவியையும் மகனையும் அழைத்துக் கொண்டு ஒரு வீட்டில் ஷேரிங்கில் குடி இருந்தேன் (ஒரே வீட்டில் இரண்டு குடும்பம் வாழ்வது).

அந்த நேரத்தில் மனதில் நம்பிக்கை மட்டும் இருந்தது. படிப்படியாக உயர்ந்து, ஃபைனான்ஸ் மேனேஜராகப் பதவி உயர்வு பெற்றுவிட்டேன். இரண்டு படுக்கை அறைகள் கொண்ட தனி வீட்டில் குடியேறினோம். எனக்கு ஒரு கார், என் மனைவிக்கு ஒரு கார் என வாழ்க்கைத் தரம் உயர்ந்தது.

பங்குச் சந்தையில் முதலீடு செய்து பழகி விட்டதால், பெரிதாக ரியல் எஸ்டேட்டில் விருப்பம் இல்லாமல் போனது. இருந்தாலும், சென்னையில் அப்பார்ட்மென்டில் ஃப்ளாட் ஒன்று வாங்கினேன். அடுத்து, பிற்காலத்தில் வீடு கட்டிக்கொள்ளலாம் எனப் பல்லாவரம் அருகில் ஒரு கிரவுண்ட் மனை வாங்கிப் போட்டுள்ளேன்.

திருச்சியிலும் கோவையிலும் கூட மனைகள் வாங்கியிருக்கிறேன். நிரந்தர மாகக் குடியேறும்போது ஏதேனும் ஓர் இடத்தில் வீடு கட்டிக்கொண்டு மற்றதை விற்றுவிடலாம் என முடிவு செய்துள்ளேன்.

முதலீடுகளை நிர்வகிக்க ஒரு கன்சல்டன்ட் இருந்தால் நன்றாக இருக்கும் என ஒருவரை நியமித்துக்கொண்டேன். என்னுடைய எதிர்காலத் தேவைகளை எல்லாம் அவரிடம் தெரிவித்தேன். மாதம் லட்ச ரூபாயை மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தால், என் ஓய்வுக்காலத்துக்கும் பிள்ளைகளின் திருமணம் மற்றும் கல்விச் செலவுகளுக் கும் தாராளமாக இருக்கும் என்றார் அவர்.

இன்னும் அதிகமாக உழைத்தேன். அலுவலகப் பணி அல்லாமல் சிறிய சிறிய தொழில்கள் செய்தும் வருமானம் ஈட்டினேன். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் ஐந்து கோடி வரை சேர்த்துவிட்டேன். இப்போது எனக்கு 48 வயது. இன்னும் 10 வருடங்கள் உழைப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது. டேர்ம் இன்ஷூரன்ஸ் இரண்டு கோடிக்கு எடுத்துள்ளேன். வீட்டில் அனைவருக்கும் மெடிக்கல் இன்ஷூரன்ஸ் துபாயிலும் இந்தியா விலும் வைத்துள்ளேன்.

என் மகள் தற்போது பத்தாம் வகுப்புப் படிக்கிறாள். அவளுக்குத் தேவையான நகைகள் கிட்டத்தட்ட 100 பவுன் அளவுக்கு வாங்கிச் சேர்த்துள்ளேன். மகன் கல்லூரியில் சேர்ந்துள்ளான். அவனுடைய படிப்புச் செலவுக்கு கிட்டத்தட்ட 50 லட்சம் வரை கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் சேர்த்து வைத்துள்ளேன். என்னால் தொடர்ந்து படிக்க முடியாத நிலையில், சிறு வயதிலேயே வேலைக்குப் போகும் சூழல் வந்ததால், என்னால் முடிந்த வரை சிரமப்படும் மாணவர்கள் பலருக்கு பள்ளிக் கட்டணம், கல்லூரிக் கட்டணம் கட்டி யுள்ளேன். இதில் எனக்கு ஒருவித சந்தோஷம், மனநிறைவு.

எதிர்காலக் கனவுகளைச் சுமந்து கொண்டிருந்த அந்தச் சிறிய வயதில், சிறிய தொகையைக் கடன் கேட்டதற்காக நான் பெற்ற அவமானம்தான் என்னை பணம் எவ்வளவு முக்கியம் என யோசிக்க வைத்தது. பணம் சம்பாதிக்க உழைக்க வைத்தது. முதலீடு செய்ய வைத்தது. கடன் நிர்வாகத்தில் கட்டுக் கோப்புடன் இயங்க வைத்தது. எதிர்காலத்துக்குத் திட்டமிட வைத்தது. கோடிகளைக் குவிக்க வைத்தது. மொத்தத்தில் வாழ்க்கையில் பணக்காரனாக என்னை உயர்த்தி வைத்தது! - பெயர், ஊர் சொல்ல விரும்பாத வாசகர்.

    ‘லாபம்’ மூலம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டைத் தொடங்க:
  • bit.ly/labham-money லிங்க் க்ளிக் செய்து எங்களின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ‘Hi’ என்று மெசேஜ் செய்யவும்.
  • அல்லது, ஃபோனில் அழைக்கவும்96002 96001
  • அல்லது நேரடியாக முதலீட்டைத் தொடங்க,my.labham.money பேஜில் லாகின் செய்யவும்.