மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி... எவ்வளவு வருமானம் எதிர்பார்க்கலாம்?

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் குறிப்பாக, சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்கள் (Systematic Investment Plans - SIPs) மூலம் முதலீடு செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவாக ஒரே மாதத்தில் கடந்த அக்டோபர் மாதத்தில் எஸ்.ஐ.பி முறையில் ரூ.25,323 கோடி முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், இந்த முறையில் முதலீடு செய்யும் பலரும், “எஸ்.ஐ.பி முதலீட்டிலிருந்து நான் எவ்வளவு வருமானம் எதிர்பார்க்கலாம்?” என்று பலரும் கேட்கிறார்கள். நிலையான வைப்புத் தொகை அல்லது வங்கி சேமிப்புக் கணக்குகளைப் போல், மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி முதலீட்டு முறையில் முன்னரே தீர்மானிக்கப்பட்ட வருமான விகிதம் இல்லை. மாறாக, பங்குச் சந்தை, கடன் சந்தை அல்லது இரண்டின் கலவையாக இருக்கும் அடிப்படை மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் செயல்திறனுக்கேற்ப வருமானம் கிடைக்கிறது.
பாரம்பர்ய முதலீட்டுத் திட்டங்களான நிலையான வைப்புத் தொகை, வங்கி சேமிப்புக் கணக்கு, கடன் பத்திரங்களை போல், மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி முதலீட்டு முறையின் மூலம் நிலையான வருமானத்தைப் பெற முடியாது. குறிப்பாக, நீங்கள் பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தால். குறுகிய காலத்தில் பங்குச் சந்தையின் இறக்கத் தால் இழப்புகூட ஏற்படும். ஆனால், ஐந்து ஆண்டுக்கு மேற்பட்ட நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தைவிட அதிக வருமானத்தை அளிக்கும்.
ஈக்விட்டி ஃபண்ட் எஸ்.ஐ.பி மூலம் என்ன வருமானம் எதிர்பார்க்கலாம்?
வரலாற்று ரீதியாக, எஸ்.ஐ.பி முதலீட்டு முறை மூலம் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் நீண்ட காலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 12% முதல் 15% வரையில் வருமானத்தை வழங்கியுள்ளன. இங்கே நீண்ட காலம் என்பது 5-10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலாகும். ஆனால், இந்த வருமானம் பரந்த பொருளாதாரப் போக்குகளுடன் (Broader Economic Trends) பொருந்திப்போகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளான நிறுவனப் பங்குகள், ஈக்விட்டி ஃபண்டுகளின் வருமானம் பொதுவாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (Gross Domestic Product - GDP) வளர்ச்சியைவிட 4% - 5% வரை அதிகமாக இருக்கும். ஜி.டி.பி வளர்ச்சி 7% ஆக இருந்தால், பங்கு சார்ந்த வருமானம் 11% முதல் 12% வரை இருக்கலாம்.
ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி வருமானத்தைப் பற்றி சிந்திக்க மற்றொரு வழி ரிஸ்க் பிரீமியத்தைப் (Risk Premium) பார்ப்பது ஆகும். அரசுக் கடன் பத்திர முதலீடு மூலம் ரிஸ்க் எதுவும் இல்லாமல் பொதுவாக ஆண்டுக்கு 7% - 8% வருமானம் கிடைக்கும். அதாவது, ரிஸ்க் பிரீமியம் 4% - 6% சேர்ந்து பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களின் மூலம் 11% - 14% வருமானத்தைப் பெற முடியும். இந்த வருமானத்தைப் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்தை சமாளிப்பவர்கள் பெற முடியும்.
ஈக்விட்டி ஃபண்ட் எஸ்.ஐ.பி முறையிலான முதலீடு ஐந்து ஆண்டுக்கு மேற்பட்ட இலக்கு களுக்கு ஏற்றவையாக இருக்கின்றன. நிஃப்டி 50 குறியீடு 2004 செப்டம்பர் முதல் 2024 செப்டம்பர் வரையிலான 20 ஆண்டுக் காலத்தில் ஆண்டுக்குச் சராசரியாக 15.94% வருமானம் கொடுத்திருக்கிறது.
இண்டெக்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்திருந்தால் இந்த வருமானத்தை ஒருவர் பெற்றிருக்க முடியும்.
கடன் ஃபண்ட்: எஸ்.ஐ.பி எப்படி?
பங்குச் சந்தை சார்ந்த ரிஸ்க் உங்களுக்கு சரிப்பட்டு வராது என்றால், எஸ்.ஐ.பி முறையின் மூலம் கடன் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்து வரலாம். இந்தத் திட்டங்கள், ஈக்விட்டி ஃபண்டுகளைப் போன்ற அதிக வருமானத்தை அளிக்காது. அதேநேரத்தில், குறைவான ரிஸ்க்கில் பொதுவாக, ஆண்டுக்கு 7% முதல் 8% வரையில் வருமானத்தை வழங்குகின்றன. இந்த ஃபண்டுகளில் இவ்வளவுதான் வருமானம் கிடைக்கும் என்பதை ஓரளவுக்கு முன்கூட்டியே கணிக்க முடியும். மூன்றாண்டுக்கு உட்பட்ட இலக்குகளுக்கு இந்தக் கடன் ஃபண்ட் திட்டங்கள் ஏற்றவையாக உள்ளன. மேலும், முதலீட்டில் சிறிதுகூட ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கு கடன் ஃபண்ட் எஸ்.ஐ.பி முதலீட்டு முறை ஏற்றதாக இருக்கும், வயதானவர்களுக்கு ஏற்றதாக இந்த முறை உள்ளது. அதே நேரத்தில் அதிக வருமானத்துக்காக நல்ல தரக்குறியீடு இல்லாத கிரெடிட் ரிஸ்க் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீட்டை தவிர்ப்பது நல்லது. மோசமான நிறுவனங்கள் அதிக வருமானம் தருவதாக கடன் பத்திரங்களை வெளியிடும் அவற்றில் முதலீடு செய்யும் கிரெடிட் ரிஸ்க் ஃபண்டுகளில் முதலீடு செய்தால் ரிஸ்க்தான்.
பேலன்ஸ்டு ஃபண்ட் எஸ்.ஐ.பி-க்கள்: இரட்டை பலன்கள்..!
முதலீட்டு வருமானத்தில் ஓரளவுக்கு நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சியின் கலவை வேண்டுமா? முதலீட்டாளர் களிடமிருந்து திரட்டப்படும் நிறுவனப் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் கலந்து முதலீடு செய்யும் ஹைபிரிட் மியூச்சுவல் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வரலாம். இந்த வகை ஃபண்டுகள் பொதுவாக, ஆண்டுக்கு 10% முதல் 12% வரை வருமானத்தை வழங்குகின்றன.
இந்த ஹைபிரிட் ஃபண்ட் பிரிவில் பங்குச் சந்தையின் சூழலுக்கு ஏற்ப நிறுவனப் பங்குகள், கடன் பத்திரங்களில் கலந்து முதலீடு செய்யும் பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டுகள் ரிஸ்க் குறைவானது. இது எஸ்.ஐ.பி முதலீட்டு முறைக்கு ஏற்றதாகும். ஈக்விட்டி ஃபண்டுகள் அல்லது கடன் ஃபண்டுகளைத் தேர்வு செய்வதா என்று ஒருவருக்குத் தெரியாவிட்டால், மிதமான வருமான வளர்ச்சியை இலக்காகக் கொண்டு குறைவான ரிஸ்க் கொண்ட இந்த ஹைப்ரிட் மியூச்சுவல் ஃபண்டுகள் ஒரு சிறந்த வழியாகும். இந்த ஹைபிரிட் ஃபண்டுகள் 3 முதல் ஐந்து ஆண்டுக் கால நிதி இலக்குகளுக்கு ஏற்றவையாகும்.
இலக்குக்கு ஏற்ற ஃபண்டுகள்...
நாம் ஏற்கெனவே பார்த்ததுபோல் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் நிதி இலக்கு களுக்கு ஏற்ப முதலீடுகளை மேற்கொண்டு வரலாம், குறுகிய கால தேவைகளுக்குக் கடன் ஃபண்டுகளும் நடுத்தரக் கால தேவைகளுக்கு ஹைபிரிட் ஃபண்டுகளும் நீண்ட கால முதலீட்டுக்கு ஈக்விட்டி ஃபண்டுகளும் ஏற்றவையாக இருக்கும்.
- ‘லாபம்’ மூலம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டைத் தொடங்க:
- bit.ly/labham-money லிங்க் க்ளிக் செய்து எங்களின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ‘Hi’ என்று மெசேஜ் செய்யவும்.
- அல்லது, ஃபோனில் அழைக்கவும்96002 96001
- அல்லது நேரடியாக முதலீட்டைத் தொடங்க,my.labham.money பேஜில் லாகின் செய்யவும்.