மியூச்சுவல் ஃபண்ட் SWP, பிக்சட் டெபாசிட் MIP... எதில் அதிக வருமானம் கிடைக்கும்?

நம்மில் பலரும் தொடர் வருமானம் மற்றும் பணி ஓய்வுக்காலத்தில் நிலையான வருமானம் பெறுவதற்கு வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டுகளில் (Fixed Deposits - FD) ஒரு வகையான மாதாந்தர வருமானத் திட்டத்தில் (Monthly Income Plan - MIP) பணத்தை முதலீடு செய்து வருகிறோம். இந்தத் திட்டமானது முதலீடு செய்வதற்கு எளிதாகவும், பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு சுலபமாகவும் இருக்கிறது என்பதால், இந்தத் திட்டத் தையே நாடி வருகிறார்கள்.

மாதச் சம்பளம் வாங்குகிற ஒருவருக்கு ஏற்கெனவே வங்கிக் கணக்கு இருக்கும்பட்சத்தில் எந்த ஓர் ஆவணமும் இல்லாமல் ஃபிக்ஸட் டெபாசிட்டில் பணத்தைச் சேர்க்கத் தொடங்கிவிடலாம். மேலும், வங்கிக் கணக்கில் மாதம் தோறும் வட்டியானது வரவு வைக்கப் பட்டுவிடும்.

வங்கி மாதாந்தர வருமானத் திட்டம்: பாசிட்டிவ், நெகட்டிவ் அம்சங்கள்...

* வங்கி மாதாந்தர வருமானத் திட்டத்துக்கான வட்டி வருமானமானது கிட்டத்தட்ட பணவீக்க விகித அளவுக்கே இருக்கிறது. தற்போதைய நிலையில், பணவீக்க விகிதம் சராசரியாக 6% - 7 சதவிகிதமாக உள்ளது. ஆனால், வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கான வட்டியோ 6.5% - 7.5 சதவிகிதமாக உள்ளது. இந்த வட்டியானது காலப் போக்கில் குறையவே செய்யும் என்பது பலரது கணிப்பு!

* இந்தத் திட்டத்தில் மூத்தக் குடிமக்களுக்குக் கூடுதலாக 0.5% வட்டி வழங்கப்படுகிறது. எத்தனை ஆண்டுகளுக்கு மாத வருமானம் தேவையோ, அதற்கேற்ற கால அளவை இந்தத் திட்டத்தில் தேர்வு செய்துகொள்ளலாம்.

* மேலும், வட்டி வருமானத்துக்கு ஒருவர் எந்த வரி வரம்பில் வருகிறாரோ, அதற்கேற்ப வருமான வரியைக் கட்ட வேண்டும். ஒருவருக்கு ஒரு நிதியாண்டில் ஆண்டுக்கு 7% வட்டி வருமானம் கிடைக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் மூலம் ரூ.1 லட்சம் வட்டி வருமானம் கிடைக்கிறது என வைத்துக் கொள்வோம். அவர் 30% வரி வரம்பில் வந்தால், அவர் ரூ.30,000 (கல்வி மற்றும் ஆரோக்கியத் தீர்வை 4% சேர்க்கப்படவில்லை) வரியாகக் கட்ட வேண்டிவரும். இதனால், வட்டி வருமானத்தை மட்டுமே நம்பி இருக்கும் பல மூத்தக் குடிமக்களுக்குச் செலவை சமாளிப்பது கடினமாக இருக்கும்.

தபால் அலுவலக எம்.ஐ.பி: பாசிட்டிவ், நெகட்டிவ் அம்சங்கள்...

தபால் அலுவலக மாதாந்தர வருமானத் திட்டத்தில் (Post Office Monthly Income Scheme- PO MIS) மாதம்தோறும் வட்டி வழங்கப்படுகிறது என்பதால், பல மூத்த குடிமக்கள் பணி ஓய்வுக் காலத் தொகுப்பு நிதியை இந்தத் திட்டத்தில் முதலீடு செய்கிறார்கள்.

இந்தத் திட்டத்தில் தற்போது ஆண்டுக்கு 7.4% வட்டி கிடைக்கிறது. இந்த வருமானம் நாட்டின் சராசரி பணவீக்க விகிதத்தைவிட சுமார் 1% என்கிற அளவுக்குதான் அதிகமாக உள்ளது.

இந்தத் திட்டத்தில் கிடைப்பது குறைவான வருமானம் என்றாலும், ரிஸ்க் எதுவும் இருக்கக் கூடாது; மாதம்தோறும் வருமானம் வர வேண்டும் என்பவர்களுக்கு ஏற்ற திட்டமாக இது இருக்கிறது.

இந்தத் திட்டத்துக்கான வட்டி மூன்று மாதத்துக்கு ஒரு முறை மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது கொஞ்சம் பாதகமான விஷயம் ஆகும். ஆனால், ஒருவர் இந்தத் திட்டத்தில் முதலீட்டை மேற்கொள்ளும்போது என்ன வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்படுகிறதோ, அந்த வட்டி இந்தத் திட்டத்தின் முதலீட்டுக் காலமான ஐந்து ஆண்டுகளுக்கு மாற்றம் இல்லாமல் இருக்கும்.

இந்தத் திட்டத்தில் தனிநபர் ஒருவர் அதிகபட்சம் ரூ.9 லட்சம் முதலீடு செய்யலாம். தம்பதிகளாக இணைந்து முதலீடு செய்வதாக இருந்தால், அதிகபட்சம் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யலாம்.

இந்தத் திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டுத் தொகை மற்றும் வட்டி வருமானத்துக்கு வருமான வரிச் சலுகை எதுவும் கிடையாது என்பது நெகட்டிவ் விஷயமே. இந்தத் திட்டத்தில் கிடைக்கும் வட்டி வருமானம் ஒருவரின் இதர வருமானமாகக் கணக்கிடப் பட்டு, அவர் எந்த வருமான வரி வரம்பில் வருகிறாரோ அதற்கேற்ப வரியைக் கட்ட வேண்டிவரும். ஆனால், ஒருவர் அடிப்படை வரி வரம்புக்குள் வரவில்லை என்றால், வரி எதுவும் கட்டவேண்டி இருக்காது.

மூத்த குடிமக்களுக்கான பிற சேமிப்புத் திட்டங்களில் வட்டியானது 8.2% தரப்பட்டு வரும் நிலையில், இந்தத் திட்டத்தில் தரப்படும் வட்டி குறைவாகும். மேலும் இந்தத் திட்டத்தில் வட்டியானது மூன்று மாதத்துக்கு ஒரு முறை வழங்கப்படும்.

SWP: எப்படிச் செயல்படும்?

வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வருமானத்துக்கு மாற்றாக பென்ஷன் மற்றும் தொடர் வருமானத்துக்கு மியூச்சுவல் ஃபண்ட் (Mutual Fund - MF) முதலீட்டில் பணம் எடுக்கும் முறையான எஸ்.டபிள்யூ.பி (SWP - Systematic Withdrawal Plan) உள்ளது.

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதும் இப்போது சுலபம்தான். பான் கார்டு, ஆதார் கார்டு, வங்கிச் சேமிப்புக் கணக்கு இருந்தால், முதலீட்டை உடனே ஆரம்பித்து விடலாம். மாதம்தோறும் எப்படி குறிப்பிட்ட தேதியில் எஸ்.ஐ.பி (SIP - Systematic Investment Plan) முறையில் முதலீடு செய்கிறோமோ, அதேபோல, எஸ்.டபிள்யூ.பி முறையில் குறிப்பிட்ட தேதியில் பணம் எடுக்க முடியும்.

ஒருமுறை இதற்கான ஏற்பாட்டைச் செய்துவிட்டால் குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிடும். அதற்கேற்ப யூனிட்டுகளை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் விற்றுக் கொள்ளும்.

SWP: FD-யைவிட கூடுதல் வருமானம்...

ஃபிக்ஸட் டெபாசிட் மாத வருமானத் திட்டத்தைவிட எஸ்.டபிள்யூ.பி திட்டத்தில் கூடுதல் வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு.

ஃபிக்ஸட் டெபாசிட் என்பது கடன் சந்தை சார்ந்த திட்டமாகும். இதில் வட்டி வருமானம் நிலையானது என்றாலும், வரிக்குப் பிந்தைய நிலையில் வருமானம் சுமார் 5 சதவிகிதமாக உள்ளது. விலைவாசி உயர்வு 6-7 சதவிகிதமாக இருக்கும் நிலையில், அதைக் கழித்தால் உண்மையான வருமானம் என்பது நெகட்டிவ்வாக உள்ளது. இதனால், விலைவாசி உயர்வுக்கேற்ப மூத்த குடி மக்கள் செலவுகளை சமாளிப்பது கடினம்.

ஒரு நிதியாண்டில் வட்டி வருமானம் 50,000 ரூபாயைத் தாண்டும்போது டி.டி.எஸ் 10% பிடிக்கப்படும். மேலும், ஃபிக்ஸட் டெபாசிட் வட்டிக்கு அந்தந்த நிதி ஆண்டி லேயே வருமான வரியைக் கட்ட வேண்டும்.

ஆனால், மியூச்சுவல் ஃபண்டைப் பொறுத்தவரை, எஸ்.டபிள்யூ.பி முறையைப் பயன்படுத்தி பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் (Equity Mutual Funds), கலப்பின மியூச்சுவல் ஃபண்டுகள் (Hybrid Mutual Funds), கடன் மியூச்சுவல் ஃபண்டுகளில் (Debt Mutual Funds) முதலீட்டாளரின் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கேற்ப பணத்தை முதலீடு செய்து, நீண்ட காலத்துக்குப் பிறகு, திரும்ப எடுத்துக்கொள்ள முடியும்.

பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டுகளைத் தேர்வு செய்யுங்கள்...

எஸ்.டபிள்யூ.பி முறைக்கு ஹைபிரிட் ஃபண்டுகள் குறிப்பாக, பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டுகள் ஏற்றவையாக இருக்கின்றன. இந்த ஃபண்டுகளில் முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் பணம், நிறுவனப் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் கலந்து முதலீடு செய்யப்படுவதால், ரிஸ்க் குறைவாக இருக்கிறது. மேலும், பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டுகளில் பங்குச் சந்தையின் செயல்பாட்டுக்கேற்ப பங்குகளின் அளவு கூட்டி, குறைக்கப்படுவதாலும் ஃபண்டின் செயல்பாட்டைக் கவனிக்க பிரத்யேக நிதி மேலாளர் இருப்பதாலும் ரிஸ்க் மேலும் குறைவதுடன், வருமானமும் அதிகரிக்கிறது.

2024 செப்டம்பர் 20-ம் தேதி நிலவரப்படி, பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் பிரிவின் சராசரி வருமானம் 14.15 சதவிகிதமாக உள்ளது. இந்தக் காலகட்டத்தில் டாப் 5 ஃபண்டுகளின் வருமானம் 16.5% - 22% என்கிற அளவில் உள்ளது.

முதலில் வாங்கியது, முதலில் விற்கப்படும்...

எஸ்.டபிள்யூ.பி முறையில் பணம் எடுக்க யூனிட்டுகளை விற்கும்போது, ‘முதலில் முதலீடு செய்த யூனிட்டுகள், முதலில் விற்கப்படுகின்றன’ (First In First Out - FIFO) என்கிற முறையில் செயல்படுகிறது. அதாவது, எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவிட்டு, எஸ்.டபிள்யூ.பி முறையில் பணத்தைத் திரும்ப எடுக்கும்போது யூனிட்டு களை விற்றால் முதலில் முதலீடு செய்த யூனிட்டுகளை விற்பதாக எடுத்துக்கொள்ளப் பட்டு, மூலதன ஆதாயம் கணக்கிடப்படும். இதனால், நீண்ட கால மூலதன ஆதாயச் சலுகை கிடைப்பதால், குறைவான வருமான வரியைக் கட்டினால் போதும். சில சமயம் வரி கட்டப்படும் நிலை முழுவதுமாகத் தவிர்க்கப்படும்.

வரி எவ்வளவு கட்டவேண்டும்?

இன்றைய தேதியில், பல பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டுகளில், இந்திய நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யப்படும் தொகை 65 சதவிகிதத்துக்கு மேல் இருப்பதால், ஈக்விட்டி ஃபண்டுகளுக்குரிய வருமான வரி விதிக்கப்படுகிறது. அதாவது, முதலீடு செய்து ஓராண்டுக்குப் பிறகு யூனிட்டுகளை விற்கும் போது, நிதி ஆண்டில் நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு ரூ.1.25 லட்சம் வரைக்கும் வருமான வரி இல்லை. அதற்கு மேற்பட்ட லாபத்துக்கு 10% வரியைக் கட்டினால் போதும்.

ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி வருமான உதாரணத்துடன் ஒப்பிடும் போது இங்கு வரி எதுவும் கட்ட வேண்டிய தில்லை. மேலும் டி.டி.எஸ் என்றும் எதுவும் பிடிக்க மாட்டார்கள். யூனிட்டுகளை விற்று பணமாக்கும்போதுதான் வருமான வரியைக் கட்ட வேண்டியிருக்கும்.

கடன் ஃபண்டுகளிலிருந்து எஸ்.டபிள்யூ.பி-யில் பணம் எடுக்கும்போது, முதலீட்டுக் காலம் எதுவாக இருந்தாலும், மூலதன ஆதாயத்துக்கு முதலீட்டாளர் எந்த வருமான வரி வரம்பில் வருகிறாரோ, அதற்கேற்ப வருமான வரியைக் கட்ட வேண்டும்.

கூடுதல் வருமானம், குறைந்த வரி..?

7% வருமானம் தரும் கடன் ஃபண்டில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள யூனிட்டுகளை விற்கும்போது மூலதன ஆதாயம் ரூ.7,000 ஆகும். முதலீட்டாளர் 30% வரி வரம்பில் வந்தால், இதற்கு 30% என்பது ரூ.2,100 வருமான வரியாகக் கட்டினால் போதும். அதே நேரத்தில், ஃபிக்ஸட் டெபாசிட்டில் ரூ.30,000 வருமான வரியைக் கட்ட வேண்டும்.

ஓராண்டுக்குப் பிறகு பணம் எடுங்கள்...

பங்குச் சந்தை சார்ந்த ஒரு ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்துவிட்டு, குறைந்தபட்சம் ஓராண்டுக்குப் பிறகு யூனிட்டுகளை விற்று எஸ்.டபிள்யூ.பி முறையில் பணம் பெறுவது நல்லது. அதற்குமுன் பணம் எடுக்கும்போது அனைத்து வகை ஃபண்டுகளிலும் எக்ஸிட் லோடு என்கிற வெளியேறும் கட்டணம் 0.5% - 1% செலுத்த வேண்டிவரும். இதுவே ஈக்விட்டி ஃபண்ட் என்கிறபோது யூனிட்டுகளை ஓராண்டுக்குமுன் விற்றால் குறுகிய கால மூலதன ஆதாய வரி 20% செலுத்த வேண்டிவரும். இதனால் நமக்குக் கிடைக்கும் லாபம் குறையும். எனவே, அதற்கேற்ப முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வது அவசியம் ஆகும். தேவைப்பட்டால் மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் (Mutual Fund Distributor - MFD) அல்லது நிதி ஆலோசகரின் உதவியைப் பெறுவது நல்லது.

எஸ்.டபிள்யூ.பி: உஷார், உஷார்...

ஃபிக்ஸட் டெபாசிட்டில் அசல் தொகை அப்படியே இருக்கும்; வட்டி வருமானம் நிலையாக வந்துகொண்டிருக்கும். மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.டபிள்யூ.பி முறையில் மாதம் எடுக்கும் தொகையைவிட கிடைக்கும் வருமானம் குறைவாக இருக்கும்பட்சத்தில், அசல் குறைய வாய்ப்புள்ளது. அந்த வகையில் முதலீடு செய்து சில ஆண்டுகள் கழித்து இந்த முறையைப் பயன்படுத்துவதுடன், எடுக்கும் தொகை, கிடைக்கக்கூடிய தோராய வருமானத்தைவிட சில சதவிகிதம் குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்வது நல்லது.

பகுதி பகுதியாக எடுக்க முடியாது...

மியூச்சுவல் ஃபண்ட் மூலம் ஆண்டுக்கு 8% வருமானம் கிடைத்தால், அதில் 6% மட்டும் எடுத்துச் செலவு செய்வது மூலம், மூலதனம் அடுத்து வரும் ஆண்டுகளில் அதிகரித்து வரும். அடுத்து வரும் ஆண்டுகளில் விலைவாசி உயர்வுக்கேற்ப கூடுதல் தொகையை எஸ்.டபிள்யூ.பி முறையில் மாற்றி அமைத்து, எடுத்துச் செலவு செய்ய முடியும். மியூச்சுவல் ஃபண்டில் சந்தை ரிஸ்க் இருப்ப தால், பணத்தைப் பல வகை ஃபண்டுகளில் பிரித்து முதலீடு செய்து அதாவது, கடன் ஃபண்ட், ஹைபிரிட் ஃபண்ட், ஈக்விட்டி ஃபண்டுகளில் பிரித்து முதலீடு செய்வதன் மூலம் ரிஸ்க்கைக் குறைக்க முடியும். மியூச்சுவல் ஃபண்டில் இடையில் தேவைப்பட்டால் பகுதி தொகை அல்லது மொத்தத் தொகையை எடுத்துக்கொள்ள முடியும். ஃபண்ட் வகையைப் பொறுத்து, முதலீட்டில் ஓரளவுக்கு, நடுத்தர அளவுக்கு, அதிக ரிஸ்க் எடுப்பவர்களுக்கு ஏற்றதாக எஸ்.டபிள்யூ.பி இருக்கிறது எனலாம்.

ஃபிக்ஸட் டெபாசிட்டில் அதிக தொகையை எடுத்துச் செலவு செய்ய முடியாது அல்லது மிக அதிக தொகையை ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்வது அவசியம் ஆகும். ஃபிக்ஸட் டெபாசிட்டில் இடையில் பணம் தேவைப் பட்டால், அபராதம் கட்டிதான் எடுக்க முடியும். அந்த வகையில் ஃபிக்ஸட் டெபாசிட் டைப் பிரித்துப் போடுவது மூலம் அபராதத்தைக் குறைக்க முடியும்.

முதலீட்டில் ரிஸ்க்கே வேண்டாம் என்பவர் களுக்கு ஃபிக்ஸட் டெபாசிட் ஏற்றதாக இருக்கும். நீண்ட கால நோக்கில் ஓரளவுக்கு ரிஸ்க் எடுத்தால் மியூச்சுவல் ஃபண்டின் எஸ்.டபிள்யூ.பி லாபகரமாக இருக்கும்!

    ‘லாபம்’ மூலம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டைத் தொடங்க:
  • bit.ly/labham-money லிங்க் க்ளிக் செய்து எங்களின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ‘Hi’ என்று மெசேஜ் செய்யவும்.
  • அல்லது, ஃபோனில் அழைக்கவும்96002 96001
  • அல்லது நேரடியாக முதலீட்டைத் தொடங்க,my.labham.money பேஜில் லாகின் செய்யவும்.