இ.எல்.எஸ்.எஸ் (ELSS) வரிச் சேமிப்பு ஃபண்ட் திட்டங்கள்... செய்யக்கூடாத 5 தவறுகள்..

வருமான வரி சேமிப்புத் திட்டங்கள் நம் மக்களிடம் எப்போதுமே பிரபலமாக உள்ளன. காரணம், வருமான வரியை முடிந்தவரை மிச்சப்படுத்த வேண்டும் என்கிற எண்ணம் நம் மக்களிடம் நிறைய இருப்பதால்தான். வருமானம் வரியை சேமிக்க நினைக்கும்போது, தவறான திட்டங்களில் நம் பணத்தை முதலீடு செய்யக் கூடாது. குறிப்பாக, ஆயுள் காப்பீடு போன்ற இன்ஷுரன்ஸ் திட்டங்களில் முதலீடு செய்யவே கூடாது. ஆயுள் காப்பீடு என்பது குடும்பத்திற்கான பாதுகாப்பே தவிர, அது வருமான வரி சேமிப்புக்கான சரியான முதலீட்டுத் திட்டம் அல்ல.

வருமான வரிக் கணக்குத் தாக்கலில் இன்றைக்கு இரண்டு விதமான முறைகள் உள்ளன. ஒன்று, பழைய வருமான வரித் தாக்கல் முறை. இரண்டாவது, புதிய வருமான வரித் தாக்கல் முறை. பழைய வருமான வரி முறையைப் பின்பற்றுபவர்களில் பலரும் இ.எல்.எஸ்.எஸ் (ELSS - Equity Linked Savings Scheme) மியூச்சுவல் ஃபண்ட் திட்டங் களில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் மூலம் வருமான வரியை மிச்சப் படுத்தும் அதே நேரத்தில் கணிசமான லாபத்தையும் பெற்று வருகிறார்கள்.

ஆனால், இ.எல்.எஸ்.எஸ் சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்துவரும் வேளையில், முதலீட்டாளர்கள் செய்யும் சில தவறுகளால் கணிசமான லாபத்தையும் இழக்கின்றனர். இ.எல்.எஸ்.எஸ் திட்டங்களில் முதலீடு செய்யும்போது செய்யக்கூடாத 5 தவறுகளை இனி பார்ப்போம்.

தவறு 1: நிதி ஆண்டின் இறுதியில் முதலீடு செய்வது கூடாது...

வருமான வரி முதலீட்டுக்கான ஆதாரத்தை ஆண்டு இறுதியில்தானே தரப் போகிறோம் எனப் பலரும் மார்ச் மாத நடுவில் அல்லது இறுதி வாரத்தில்தான் இ.எல்.எஸ்.எஸ் முதலீடு செய்கிறார்கள். இப்படிச் செய்வது மூலம் வருமானத்தில் குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது. இ.எல்.எஸ்.எஸ் மியூச் சுவல் ஃபண்ட் திட்டத்தில், முதலீட் டாளர்களிடமிருந்து திரட்டப்படும் பணம் முழுவதும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும். ஆண்டு இறுதியில் பங்குச் சந்தை உச்சத்தில் இருக்கும் நிலையில் முதலீடு செய்தால், குறைவான யூனிட்டுகளே கிடைக்கும். சந்தை உச்சத்தில் இருந்து திடீரென இறங்கினால், அது மீண்டும் லாபத்துக்கு வர அதிக காலம் வரும். இந்த ரிஸ்க்கைக் குறைக்க நிதி ஆண்டு ஆரம்பம் முதலே எஸ்.ஐ.பி முறையில் மாதம்தோறும் முதலீடு செய்ய வேண்டும்.

தவறு 2: மொத்தமாக முதலீடு செய்வது கூடாது…

இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் மொத்த முதலீட்டைத் தவிர்ப்பது நல்லது. மொத்த முதலீட்டுக்குப் பதில் எஸ்.ஐ.பி முறையில் தொடர்ந்து முதலீடு செய்து வரும்பட்சத்தில் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கத்தில் அதிக யூனிட்டுகள் கிடைக்கும்.

இதன் மூலம் நீண்ட காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

தவறு 3: சமீப காலத்தில் கிடைத்த வருமானத்தைப் பார்த்து முதலீடு செய்யக் கூடாது...

சமீப காலத்தில் குறிப்பாக, கடந்த ஓராண்டில் மிக அதிக வருமானத்தைத் தந்திருக்கிறது என ஒரு இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் திட்டத்தைத் தேர்வு செய்யக் கூடாது. கடந்த 3, 5 மற்றும் 10 ஆண்டு களில் குறிப்பிட்ட ஃபண்ட் என்ன வருமானம் தந்திருக்கிறது, அதன் வருமான ஒப்பிட்டு பென்ச்மார்க்கைவிட அதிக வருமானம் தந்திருக்கிறதா என்பதைக் கவனித்து முதலீடு செய்வது சரி.

தவறு 4: டிவிடெண்ட் ஆப்ஷனைத் தேர்வு செய்யக் கூடாது...

இ.எல்.எஸ்.எஸ். ஃபண்டில் டிவிடெண்ட் ஆப்ஷனை இரு காரணங்களுக்காகத் தேர்வு செய்யக் கூடாது. முதல் காரணம், அதிக வருமான வரி கட்ட வேண்டி வரும். இரண்டாவது, பிற்பாடு குறைவான தொகையே கிடைக்கும். டிவிடெண்ட் ஆப்ஷனில் இடை இடையே டிவிடெண்ட் வழங்கப்படுவதால், ‘லாக்இன் பீரியட்’ முடிந்த பிறகு கிடைக்கும் தொகை குறைவாகவே இருக்கும்.

தவறு 5: அதிக ஃபண்டுகளில் முதலீடு...

இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகளில் குறைந்தபட்ச மொத்த முதலீடு மற்றும் எஸ்.ஐ.பி முதலீடு ரூ.500 ஆகும். ஒருவர் மாதம்தோறும் ரூ.5,000 வீதம் முதலீடு செய்ய நினைக்கிறார் எனில், அவர் அதிகபட்சம் 1 அல்லது 2 இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டுகளைத் தேர்வு செய்தால் போது, ரூ.500 வீதம் 10 ஃபண்டுகளில் முதலீடு செய்யக் கூடாது.

அதிக எண்ணிக்கையில் ஃபண்ட் திட்டங்களைத் தேர்வு செய்தால், அவற்றைக் கண்காணிப்பது கடினம். இதனால் நம் லாபம் குறைவதற்கே நிறைய வாய்ப்பு இருக்கிறது. வரிச் சேமிப்பு பலனைத் தரும் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்டில் முதலீடு செய்யும்போது இந்த 5 தவறுகளை செய்யாமல் இருப்பதுடன், வரிச் சலுகைக்கான 'லாக் இன் பீரியட்' முடிந்தவுடன் பணத்தைத் திரும்ப எடுப்பதும் கூடாது. நீங்கள் முதலீடு செய்யும் இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் எத்தனை சதவிகிதம் லாபம் தருகிறது என்பதைக் கண்டறிந்து, அதன் அடிப்படையில் முதலீட்டைத் தொடர்ந்து வைத்திருக்கலாமா அல்லது எடுத்துவிடலாமா என்று முடிவு செய்ய வேண்டுமே தவிர, 'லாக்-இன் பீரியட்' முடிந்த ஒரே காணத்துக்காக பணத்தைத் திரும்ப எடுக்கக் கூடாது!

    ‘லாபம்’ மூலம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டைத் தொடங்க:
  • bit.ly/labham-money லிங்க் க்ளிக் செய்து எங்களின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ‘Hi’ என்று மெசேஜ் செய்யவும்.
  • அல்லது, ஃபோனில் அழைக்கவும்96002 96001
  • அல்லது நேரடியாக முதலீட்டைத் தொடங்க,my.labham.money பேஜில் லாகின் செய்யவும்.