மல்ட்டி அசெட் ஃபண்டுகளில் முதலீடு செய்தால் லாபமா?

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் மத்தியில் மல்டி அஸெட் ஃபண்டுகள் (Multi Asset Funds) சமீபத்தில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. சந்தை சூழல், பட்ஜெட்டில் வரி விதிப்பு முறையில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் போன்ற காரணங்களால் மல்டி அஸெட் ஃபண்டுகளுக்கு முதலீட்டாளர்கள் தாவி வருகின்றனர்.
மல்டி அஸெட் ஃபண்டுகள் என்றால்...?
மல்டி அஸெட் என்ற பெயருக்கு ஏற்றதுபோல பல்வகையான சொத்துகளில் மல்டி அஸெட் ஃபண்டுகள் முதலீடு செய்கின்றன. மல்டி அஸெட் ஃபண்டுகள் என்பது ஹைப்ரிட் ஃபண்டுகளுக்கு அடுத்த வெர்ஷன் எனலாம்.
ஹைப்ரிட் ஃபண்டுகளில் ஈக்விட்டி, கடன் ஆகிய இரண்டு சொத்து வகைகள் மட்டுமே இருக்கும். மல்டி அஸெட் ஃபண்டுகளில் கூடுதலாக தங்கம், வெள்ளி போன்ற கமாடிட்டி சொத்துகள் இருக்கும். இதுபோக, ரீட் (REIT), இன்விட் (InvIT) போன்ற ரியல் எஸ்டேட் சொத்துகளும் இருக்கும்.
மல்டி அஸெட் ஃபண்டுகளில் குறைந்தபட்சமாக மூன்று சொத்து வகைகள் கட்டாயமாக இருக்க வேண்டும். அதற்கு மேல் நான்காவது சொத்து வகையை வைத்துக்கொள்வது ஃபண்ட் மேனேஜரின் முடிவுதான்.
செபி விதிமுறைகளின்படி, மல்டி அஸெட் ஃபண்டுகளில் ஒவ்வொரு சொத்து வகையிலும் குறைந்தபட்சம் 10 சதவிகிதமாவது முதலீடு செய்யப்பட வேண்டும். ஹைப்ரிட் ஃபண்டுகளில் ஈக்விட்டி, கடன் ரிஸ்க்கை மதிப்பிட்டால், ரிஸ்க் குறைவாகத்தான் இருக்கும். ஆனால், வருமானத்தை மதிப்பிட்டால் அதிக வருமானம் கிடைக்கும். ஈக்விட்டியைவிடக் குறைவான ரிஸ்க், கிட்டத்தட்ட ஈக்விட்டி போன்ற சராசரி வருமானம் கிடைப்பது ஹைப்ரிட் ஃபண்டுகளில் இருக்கும் பெரிய பிளஸ் ஆகும்.
பங்குச் சந்தை + கடன் சந்தை
இதே பலன்கள்தான் ஹைப்ரிட் ஃபண்டுகளின் அடுத்த வெர்ஷனான மல்டி அஸெட் ஃபண்டுகளிலும் கிடைக்கும். மல்டி அஸெட் ஃபண்டுகள் தங்கத்திலும் சேர்த்து முதலீடு செய்கின்றன. ஈக்விட்டி, கடன் சந்தைகள் இரண்டும் ஒரே வழியில் போகாது. ஈக்விட்டி சிறப்பாக இருக்கும்போது கடன் மந்தமாக இருக்கும். கடன் சிறப்பாக இருக்கும்போது ஈக்விட்டி மந்தமாக இருக்கும். உதாரணமாக, ஒரு ஹைப்ரிட் ஃபண்டில் 75% ஈக்விட்டி, 25% கடன் ஒதுக்கீடு இருக்கிறது என வைத்துக்கொள்வோம். ஒரு 6 மாதத்தில் பங்குச்சந்தை வளர்ச்சியால் ஈக்விட்டி ஒதுக்கீடு 85 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்துவிடுவதாக வைத்துக்கொள்வோம். அப்போது, கடன் ஒதுக்கீடு 15 சதவிகிதம் என்ற அளவில் குறைந்துவிடும். இதுபோன்ற சூழலில் போர்ட்ஃபோலியோவை ரீபேலன்ஸ் செய்வார்கள். இதற்காக, ஈக்விட்டியை விற்றுவிட்டு கடன் சொத்துகளை வாங்குவார்கள். அதாவது எந்த சொத்து மேலே போகிறதோ அதை விற்றுவிட்டு, எந்த சொத்து கீழே இருக்கிறதோ அதை வாங்குவார்கள்.
ஒருவேளை கடன் சந்தை மேலே எழுந்து, ஈக்விட்டி சந்தை கீழே இறங்கினால், கடன் பத்திரங்களை விற்றுவிட்டு ஈக்விட்டி பங்குகளை வாங்குவார்கள். இதனால், ஃபண்ட் போர்ட்ஃபோலியோ ரீபேலன்ஸ் ஆகிவிடும்.
இதன் அடுத்தகட்டம்தான் மல்டி அஸெட் ஃபண்டுகள். தங்கம், ரியல் எஸ்டேட் சொத்துகளும் போர்ட்ஃபோலியோவில் வேண்டும் என்பவர்கள் மல்டி அஸெட் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். தங்கத்தை பொறுத்தவரை, ஈக்விட்டி, கடன் போன்ற மற்ற சொத்துகளில் ஒரு பதற்றமான சூழலோ, நிச்சயமற்ற நிலையோ உருவாகும்போது தங்கம் மதிப்பு உயரும்.
பொருளாதார நெருக்கடி ஏற்படும் காலகட்டங்களில் ஈக்விட்டி சந்தை இறங்கும், கடன் சந்தை பெரிய ஏற்ற இறக்கம் இல்லாமல் ஒரே நிலையில் இருக்கும். ஆனால், தங்கம் மதிப்பு உயரத் தொடங்கும். இதுபோன்ற காலகட்டங்களில் மல்டி அஸெட் ஃபண்டுகள் பலன் தரும். போர்ட்ஃபோலியோ கொஞ்சம் நிலையானதாக இருக்கும்.
யாருக்கு ஏற்றது?
வங்கி வைப்பு நிதித் திட்டங்களில் (Fixed Deposit) முதலீடு செய்வோர் தங்களது முதலீட்டில் ஒரு சிறு பகுதியை மல்டி அஸெட் ஃபண்டுகளில் முதலீடு செய்வது பற்றி பரிசீலிக்கலாம். வைப்பு நிதி முதலீட்டில் இருந்து மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கு மாறுபவர்கள், நேரடியாக ஈக்விட்டி ஃபண்டுகளுக்கு போகாமல், தொடக்கத்தில் 10 சதவிகிதத்தை எடுத்து மல்டி அஸெட் ஃபண்டுகளில் முதலீடு செய்து வைக்கலாம். பின்னர் வருமானத்தை பார்த்து படிப்படியாக மல்டி அஸெட் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். வைப்பு நிதியில் சுமார் 7% வருமானம் கிடைத்தால், மல்டி அஸெட் ஃபண்டுகளில் குறைந்தபட்சம் 10% வருமானம் கிடைத்துவிடும். வைப்பு நிதியில் 7% பெறுவதை விட, மல்டி அஸெட் ஃபண்டுகளில் நீண்டகால அடிப்படையில் 10% வருமானம் பெறுவது எவ்வளவோ மேல்” என்று கூறினார்.
வரி விதிப்பு
மல்டி அஸெட் ஃபண்டுகளில் ஈக்விட்டி, கடன் சொத்துகளுக்கு எவ்வளவு வெய்ட்டேஜ் இருக்கிறது என்பதை பொறுத்துதான் வரி விதிக்கப்படுகிறது. சில மல்டி அஸெட் ஃபண்டுகள் 70 சதவிகிதம் மேல் ஈக்விட்டியில் முதலீடு செய்துள்ளன. சில ஃபண்டுகள் சுமார் 40 சதவிகிதத்துக்கு குறைவாக ஈக்விட்டியில் முதலீடு செய்துள்ளன. சந்தை சூழலுக்கு ஏற்ப சொத்துகளுக்கான வெய்ட்டேஜ் உயர்த்தப்படலாம் அல்லது குறைக்கப்படலாம். ஆனால், ஃபண்டில் இருந்து பணத்தை எடுக்கும் தேதியில் இருந்து ஃபண்டின் 12 மாத சராசரி ஈக்விட்டி அல்லது கடன் வெய்ட்டேஜுக்கு ஏற்ப வரி விதிக்கப்படும்.
எவ்வளவு வரி?
ஒரு மல்டி அஸெட் ஃபண்டில் 65 சதவிகிதம் அல்லது அதற்குமேல் ஈக்விட்டி இருந்தால், அதற்கு ஈக்விட்டி அடிப்படையில் வரி விதிக்கப்படும். ஒரு ஆண்டுக்குப்பின் மியூச்சுவல் ஃபண்டை விற்பனை செய்தால், 1.25 லட்சம் ரூபாய்க்கு மேலான லாபத்துக்கு 12.5 சதவிகித நீண்டகால மூலதன ஆதாய வரி (LTCG) விதிக்கப்படும். ஒரு ஆண்டுக்குள் விற்பனை செய்தால் 20 சதவிகித குறுகிய கால மூலதன ஆதாய வரி (STCG) விதிக்கப்படும்.
ஒரு வேளை 65 சதவிகிதம் அல்லது அதற்கு மேல் கடன் சொத்துகள் இருந்தால், கடன் அடிப்படையில் வரி விதிக்கப்படும். மூன்று ஆண்டுகளுக்குள் மியூச்சுவல் ஃபண்டை விற்பனை செய்தால், வருமான வரி விகிதாச்சாரத்திலேயே குறுகிய கால மூலதன ஆதாய வரி விதிக்கப்படும். மூன்று ஆண்டுகளுக்குப் பின் விற்பனை செய்தால் 12.5 சதவிகித நீண்டகால மூலதன ஆதாய வரி விதிக்கப்படும். மேலும், இண்டெக்ஸேஷன் (Indexation) பலன்கள் கிடைக்காது.
- ‘லாபம்’ மூலம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டைத் தொடங்க:
- bit.ly/labham-money லிங்க் க்ளிக் செய்து எங்களின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ‘Hi’ என்று மெசேஜ் செய்யவும்.
- அல்லது, ஃபோனில் அழைக்கவும்96002 96001
- அல்லது நேரடியாக முதலீட்டைத் தொடங்க,my.labham.money பேஜில் லாகின் செய்யவும்.