மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் இருந்து எப்போது வெளியேற வேண்டும்?

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு ஒருவர் நேரம், காலம் பார்க்கத் தேவையில்லை. மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதற்கு எல்லா நாள்களும் நல்ல நாள்களே, நல்ல நேரமே. ஆனால், அந்த முதலீட்டிலிருந்து எப்போது வெளியேற வேண்டும் என்பது குறித்து நன்கு தெரிந்துவைத்திருக்க வேண்டும். மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் இருந்து எப்போது வெளியேறலாம்?

அவசரச் செலவுக்குப் பணம் தேவைப்பட்டால்... ஒருவருக்குத் திடீரென எதிர்பாராத வகையில், மருத்துவச் செலவு, குடும்பச் செலவு போன்ற அவசரச் செலவுகள் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அப்படி வரும்பட்சத்தில், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் இருக்கும் பணத்தை எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படி பணம் எடுக்கும்போது, முதலீட்டில் இருக்கும் அனைத்துப் பணத்தையும் எடுக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. தேவைப்படும் அளவுக்கான பணத்தை மட்டும் எடுத்துக்கொள்ளும் வசதி மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் இருக்கிறது. அவசரத் தேவைக்கான பணத்தைப் பங்குச் சந்தை சார்ந்த ஃபண்ட் திட்டங்களில் வைத்திருக்காமல், லிக்விட் ஃபண்டுகளில் வைத்திருப்பது நல்லது. சில ஃபண்ட் திட்டங்களில் பணத்தை உடனடியாகத் திரும்ப எடுக்க ஏ.டி.எம் கார்டு வசதியும் உண்டு. பொதுவாக, உங்கள் முதலீட்டில் உள்ள பணத்தைத் திரும்ப எடுக்க நினைத்தால், ஒன்றிரண்டு, நாள்களுக்குள் உங்கள் வங்கிக் கணக்குக்குப் பணம் வந்து சேர்ந்துவிடும்.

தொடர்ச்சியாகப் பணம் தேவைப்பட்டால்... திடீர் வேலை இழப்பு அல்லது ஓய்வு பெற்றபின் உங்களுக்குத் தொடர்ச்சியாகப் பணம் தேவைப்படும்பட்சத்தில், மியூச்சுவல் ஃபண்டில் நீங்கள் செய்த முதலீட்டில் இருக்கும் பணத்தைத் திரும்ப எடுக்கலாம். இப்படித் திரும்ப எடுக்கும் பணத்தை ஒரு முறை மொத்தமாகவும் எடுக்கலாம். அல்லது, மாதந்தோறும் இவ்வளவு என்கிற பணம் என்கிற வகையில் குறிப்பிட்ட அளவிலும் பணத்தை எடுக்கலாம். இப்படி மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு பணத்தைத் திரும்ப எடுப்பதற்கு எஸ்.டபிள்யு.பி (SWP - Systematic Withdrawal Plan) என்று பெயர்.

அடையவேண்டிய இலக்குத் தொகையை அடைந்துவிட்டால்... மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் முதலீட்டைத் தொடங்குவதன் நோக்கமே நம் எதிர்கால நிதி இலக்குகளை (Financial Goal) சரியான முறை அடைய வேண்டும் என்பதற்காகத்தான். நம் எதிர்கால இலக்கிற்கான பணத்தை நாம் சேர்த்துவிட்டால், அந்தப் பணத்தை எடுத்து, ரிஸ்க் இல்லாத வேறொரு ஃபண்டில் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். உதாரணமாக, ரிஸ்க் மிகுந்த பங்குச் சந்தை சார்ந்த ஃபண்ட் திட்டத்தில் நீங்கள் பணம் வைத்திருந்தால், இலக்கை அடைந்தபின் உங்கள் பணத்தை எடுத்து, கடன் சந்தை அல்லது வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டில் வைத்திருப்பது நல்லது!

ஃபண்ட் திட்டம் மிக மோசமாக செயல்படும்போது... சில சமயம், சில கடன் ஃபண்ட் திட்டங்கள் மிக மோசமாக செயல்பட வாய்ப்பு உள்ளன. நிதி மேலாளரின் மோசமான செயல்பாடு இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். அப்படி இருக்கும்பட்சத்தில் அந்த ஃபண்ட் திட்டத்தில் இருக்கும் பணத்தைத் திரும்ப எடுத்து, நன்கு செயல்படும் ஃபண்ட் திட்டத்தில் மீண்டும் முதலீடு செய்யலாம்!

    ‘லாபம்’ மூலம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டைத் தொடங்க:
  • bit.ly/labham-money லிங்க் க்ளிக் செய்து எங்களின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ‘Hi’ என்று மெசேஜ் செய்யவும்.
  • அல்லது, ஃபோனில் அழைக்கவும்96002 96001
  • அல்லது நேரடியாக முதலீட்டைத் தொடங்க,my.labham.money பேஜில் லாகின் செய்யவும்.