மியூச்சுவல் ஃபண்ட்... தவறான நம்பிக்கைகளும், சரியான விளக்கங்களும்...!

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்த விழிப்புணர்வு இன்றைக்கு இந்திய மக்களிடம் வெகுவாக அதிகரித்து வருகிறது. பல கோடிக் கணக்கான மக்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் முதலீடு செய்து வருகிறார்கள். அதே நேரத்தில், இந்த முதலீடு குறித்து பல தவறான நம்பிக்கைகள் (Myths) முதலீட்டாளர்களிடையே இருந்து வருகிறது. இந்தத் தவறான நம்பிக்கைகளை முதலீட்டாளர்களின் மனதில் இருந்து, நீக்க வேண்டும் எனில், இந்த முதலீட்டைப் பற்றி நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பற்றிய சில தவறான நம்பிக்கைகளையும் அவற்றுக்கான சரியான விளக்கங்களையும் இங்கே தந்திருக்கிறோம்.
1: தவறான நம்பிக்கை: குறைந்த என்.ஏ.வி லாபகரமானது...
சரியான விளக்கம்:
நிகர சொத்து மதிப்பு (NAV - Net Asset Value) என்பது ஒரு குறிப்பிட்ட மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யப்பட்ட சொத்துகளின் மதிப்பைப் பிரதிபலிக்கிறது. பங்குச் சந்தையின் ஏற்ற, இறக்கத்துக்கேற்ப இந்த என்.ஏ.வி மதிப்பு தினமும் மாறும்; அதாவது, ஏறும், இறங்கும். ஒரு ஃபண்ட் திட்டத்தின் என்.ஏ.வி குறைவாக இருக்கிறது எனில், அந்தத் திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டதாக இருக்கலாம்; அல்லது, மோசமாக செயல்படும் திட்டமாக இருக்கலாம். ஒரு ஃபண்ட் திட்டத்தின் மதிப்பு ஏன் குறைவாக இருக்கிறது என்று பார்க்க வேண்டுமே தவிர, குறைந்த அளவில் என்.ஏ.வி இருக்கிறது என்கிற ஒரே காரணத்துக்காக ஒரு ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யக் கூடாது. அப்படி முதலீடு செய்வது லாபகரமானதாக இருக்காது. குறைவான என்.ஏ.வி.யைப் பார்த்து முதலீடு செய்வது தவறான அணுகுமுறையாகும். எனவே, வெறும் என்.ஏ.வி.யைப் பார்த்து மட்டும் முதலீடு செய்யக்கூடாது!
2: தவறான நம்பிக்கை: பழைய ஃபண்ட் திட்டங்களைவிட புதிய ஃபண்ட் திட்டங்கள் (NFO - New Fund Offer) லாபகரமானவை…
சரியான விளக்கம்:
ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கும் ஃபண்ட் திட்டங்களைவிட புதிய ஃபண்ட் வெளியீட்டின் மூலம் சந்தைக்கு வரும் ஃபண்ட் திட்டங்கள் சிறப்பானது என்று சொல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அந்தப் புதிய ஃபண்ட், இனிமேல்தான் அதன் வருமான செயல்பாட்டை ஆரம்பிக்க வேண்டும். அதாவது, என்.என்.எஃப் மூலம் இப்போது சந்தைக்கு வந்திருக்கும் ஃபண்டானது செடி என்றால், ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கும் ஃபண்ட் காய்த்து குலுங்கும் பெரிய மரம் ஆகும்.
செடி நன்கு வளர்ந்தபிறகு பூப்பூத்து, காயும் பழமும் தரும். எனவே, நம் முதலீட்டின் பெரும்பகுதி மரங்களாக இருக்கும் ஏற்கெனவே இருக்கும் திட்டங்களை நோக்கிச் சொல்ல வேண்டுமே தவிர, செடிகளாக இருக்கும் புதிய திட்டங்களை நோக்கிச் செல்லக் கூடாது!
3: தவறான நம்பிக்கை: மியூச்சுவல் ஃபண்ட் அதிக விவரம் தெரிந்தவர்களுக்கு மட்டும்தான்…
சரியான விளக்கம்:
பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட், கடன் சந்தை சார்ந்த முதலீடு எதுவாக இருந்தாலும் அதனை நிர்வகிக்க நிதி மேலாளர் (Fund Manager) என்பவர் இருப்பார். சந்தை பற்றிய படிப்பறிவு, அனுபவம் ஆகியவற்றில் இவர் சிறந்தவராக இருப்பார். முதலீட்டாளர்கள் செய்யும் முதலீட்டை இவர் சிறந்த முறையில் நிர்வாகம் செய்வார். எனவே, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்கள் அதிக விவரம் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு முறை பற்றியும், எப்படிப்பட்ட ரிஸ்க் உள்ள திட்டத்தில் முதலீடு செய்கிறோம் என்பதை மட்டும் முதலீட்டாளர்கள் நன்கு தெரிந்துகொண்டு முதலீடு செய்தால் போதும்.
4. தவறான நம்பிக்கை: எஸ்.ஐ.பி என்பது ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் ஆகும்…
சரியான விளக்கம்:
எஸ்.ஐ.பி என சுருக்கமாக அழைக்கப்படும் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்மென்ட் பிளான் (SIP, or Systematic Investment Plan எஸ்.ஐ.பி) என்பது ஒரு முதலீட்டுத் திட்டம் அல்ல. இது ஒரு முதலீட்டு முறை ஆகும். ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட அளவுக்கு பணத்தைத் தொடர்ந்து முதலீடு செய்வதற்குப் பெயர்தான் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்மென்ட் பிளான் (SIP) ஆகும். எஸ்.ஐ.பி முறையில் தொடர்ந்து முதலீடு செய்யும்போது பல்வேறு விலைகளில் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகளை நம்மால் வாங்க முடியும். இதனால் சராசரி விலையில் (Rupee cost average) மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகள் நமக்குக் கிடைக்கின்றன. இதன் மூலம் எதிர்காலத்தில் நம்மால் நல்ல லாபத்தை அடைய முடியும். கடந்த 15, 20 ஆண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் தொடர்ந்து முதலீடு செய்துவந்தவர் மிகப் பெரிய அளவில் லாபம் அடைந்திருக்கிறார்கள் என்பதே இதற்கு முக்கியமான சாட்சி.
5. தவறான நம்பிக்கை: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது அதிக ரிஸ்க் வாய்ந்தது...
சரியான விளக்கம்:
ஒவ்வொரு முதலீட்டிலும் ஓரளவு ரிஸ்க் இருக்கவே செய்கிறது. ரிஸ்க் இல்லாத முதலீடு என்று எதுவும் இல்லை. அந்த வகையில், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டிலும் ரிஸ்க் இருக்கிறது என்பது உண்மையே தவிர, அது அதிக ரிஸ்க் வாய்ந்தது என்று சொல்வது சரியல்ல. மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் இரு வகை உள்ளன. ஒன்று, கடன் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள். இன்னொன்று, பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்.
கடன் சந்தை சார்ந்த திட்டங்களில் திரட்டப்படும் முதலீடானது கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படும். இதில் நாம் முதலீடு செய்யும் பணத்திற்கு அதாவது, மூலதனத்திற்கு (Capital) 99% பாதுகாப்பு உண்டு என்பதால், இதில் ரிஸ்க் குறைவு என்று சொல்லலாம். ஆனால், பங்குச் சந்தை சார்ந்த திட்டத்தில் முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் முதலீடு அனைத்தும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும். பங்குச் சந்தை எப்போதும் ஏற்ற, இறக்கமாகவே இருக்கும். எனவே, இதில் செய்யப்படும் முதலீடும் குறுகிய காலத்தில் ஏற்ற, இறக்கமாகவே இருக்கும். இந்த ரிஸ்க்கை ஒரு முதலீட்டாளர் நன்கு தெரிந்துகொண்டுதான் அதில் முதலீடு செய்ய வேண்டும்.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் ரிஸ்க்கே வேண்டாம் என்று நினைப்பவர்கள் கடன் சந்தை சார்ந்த ஃபண்ட் திட்டங்களிலும், ரிஸ்க் எடுக்க முடியும் என்று நினைப்பவர்கள் பங்குச் சந்தை சார்ந்த ஃபண்ட் திட்டங்களிலும் முதலீடு செய்யலாம். ஓரளவு மட்டுமே ரிஸ்க் எடுக்க முடியும் என்று நினைப்பவர்கள், கடன் சந்தை + பங்குச் சந்தை ஆகிய இரண்டும் கலந்த ஹைபிரீட் ஃபண்ட் திட்டங்களிலும் முதலீடு செய்யலாம். ஆக, மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் ஒவ்வொருவர் எடுக்க நினைக்கும் ரிஸ்க் அளவுக்கேற்ப பல திட்டங்கள் உள்ளன. அதில் ஒரு முதலீட்டாளர் தனக்கேற்ற ஃபண்ட் திட்டத்தைத் தேர்வு செய்வதுதான் சரியானதே தவிர, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடே அதிக ரிஸ்க் வாய்ந்தது என்று சொல்வது சரியல்ல!
6. தவறான நம்பிக்கை: மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய அதிக பணம் தேவை....
சரியான விளக்கம்:
மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்குவதற்கு அதிக அளவில் பணம் தேவை இல்லை. மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி முறையில் 100 ரூபாயில் இருந்தே முதலீட்டைத் தொடங்கிவிட முடியும். 500 ரூபாய் அல்லது 1000 ரூபாயைக் கொண்டும் எஸ்.ஐ.பி முதலீட்டைத் தொடங்கலாம். எஸ்.ஐ.பி முறையில் அல்லாமல் ஒருவர் மொத்த முதலீட்டின் (lumpsum) முதலீடு செய்ய நினைத்தால், குறைந்தபட்சம் 5000 ரூபாய் இருந்தால் போதும், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்துவிடலாம்.
எனவே, லட்சக் கணக்கில் இருந்தால்தான் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய முடியும் என்றோ, பெரும் பணக்காரர்கள் மட்டுமே மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய முடியும் என்றோ நினைப்பது தவறான நம்பிக்கை ஆகும்!
7. தவறான நம்பிக்கை: மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய நேரம், காலம் பார்க்க வேண்டும்...
சரியான விளக்கம்:
மியூச்சுவல் ஃபண்டில் பங்குச் சந்தை சார்ந்த ஃபண்ட் திட்டத்தில் ஒரே ஒரு முறை மொத்தமாக (lumpsum) முதலீடு செய்யும்போதுதான் பங்குச் சந்தை எந்த நிலையில் இருக்கிறது, மொத்த முதலீட்டை செய்வதற்கு இப்போது சரியான நேரமா என்று பார்க்க வேண்டும்.
ஆனால், மாதந்தோறும் முதலீடு செய்வதற்கு வாய்ப்பினை ஏற்படுத்தித் தரும் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்வதற்கு நேரம், காலம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. பங்குச் சந்தை என்பது எப்போதும் ஏற்ற, இறக்கத்தில் இருந்துகொண்டே தான் இருக்கும். மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட அளவு பணத்தை நாம் முதலீடு செய்துகொண்டே இருக்கும்பட்சத்தில், சராசரி விலையில் நமக்கு ஃபண்ட் யூனிட்டுகள் கிடைத்துக்கொண்டே இருக்கும். எனவே, பங்குச் சந்தையின் ஏற்ற, இறக்கத்தைப் பற்றி கவலைப்படாமல், எப்போது வேண்டுமானாலும் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யத் தொடங்கலாம். இதற்கு நேரம், காலம் பார்க்க வேண்டும் என்கிற அவசியமே இல்லை!
8. தவறான நம்பிக்கை: மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் வெளிப்படைத்தன்மை இல்லை...
சரியான விளக்கம்:
இன்றைய நிலையில், பல்வேறு முதலீடுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் இருக்கிற மாதிரியான வெளிப்படைத்தன்மை வேறு எதிலும் இல்லை எனலாம். மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை பங்குச் சந்தை கண்காணிப்பு வாரியமான செபி (SEBI)அமைப்பும், அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் கூட்டமைப்பான ஆம்பி (AMFI - Association of Mutual Funds in India) அமைப்பும் நடத்திவருவதால், அதில் அதிகமான வெளிப்படைத்தன்மை இருக்கிறது. செபி மற்றும் ஆஃம்பி அமைப்பின் விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள்படி, தினசரி என்.ஏ.வி மதிப்பை வெளியிடுதல், மாதம் தோறும் அறிக்கை அனுப்புவது, முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் நிதி எந்தக் கடன் பத்திரங்களில் / பங்குகளில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது என்கிற விவரங்கள் குறிப்பிட்ட மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அனைவரும் காணக் கிடைக்கிறது. எனவே, மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுத் திட்டங்களில் எந்த ஒளிவுமறைவும் கிடையாது என்பதே உண்மை!
9. தவறான நம்பிக்கை: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு நீண்ட காலத்துக்கானது...
சரியான விளக்கம்:
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் அனைத்துமே நீண்ட காலத்துக்கானது என்று சொல்ல முடியாது. ஒரு மாதம் முதல் ஓராண்டு காலத்துக்கான மிகக் குறுகிய காலத் திட்டங்கள், ஓராண்டு முதல் மூன்றாண்டு காலத்துக்கான குறுகிய காலத் திட்டங்கள், மூன்று ஆண்டு முதல் ஐந்து ஆண்டு காலத்துக்கான ஓரளவுக்கான நீண்ட காலத் திட்டங்கள், ஐந்து ஆண்டு முதல் பத்து ஆண்டு காலத்துக்கான நீண்ட காலத் திட்டங்கள், பத்து முதல் பதினைந்து ஆண்டு காலத்துக்கான மிக நீண்ட காலத்துக்கான திட்டங்கள் என பல வகையான ஃபண்ட் திட்டங்கள் உள்ளன. இவற்றில் உங்களுக்குத் தேவையான திட்டம் எது என்பதை நீங்கள் தேர்வு செய்து முதலீடு செய்யலாம். உங்களால் தேர்வு செய்ய முடியவில்லை எனில், நிதி ஆலோசகரின் உதவியுடன் தேர்வு செய்துகொள்ளலாம்.
10. தவறான நம்பிக்கை: மியூச்சுவல் ஃபண்டில் மிக அதிகமான லாபம் கிடைக்கும்...
சரியான விளக்கம்:
மியூச்சுவல் ஃபண்டில் மிக அதிகமான லாபம் கிடைக்கும் என்று நினைத்து பலரும் முதலீடு செய்கிறார்கள். மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் கிடைக்கும் லாபம் என்பது பங்குச் சந்தை அல்லது கடன் சந்தை மூலம் கிடைக்கும் வருமானத்தின் அளவைப் பொருத்தது. உதாரணமாக, பங்குச் சந்தை நன்றாக செயல்படும் நிலையில், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டில் கிடைக்கும் லாபம் அதிகமாக இருக்கும். அதே போல, கடன் சந்தை நன்றாக செயல்பட்டால், கடன் சந்தை மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் அதிக லாபம் கிடைக்கக்கூடும். நீண்ட கால நோக்கில் பங்குச் சந்தை மூலம் ஆண்டுதோறும் குறைந்தபட்சம் 12% முதல் 15% லாபம் கிடைத்தால், அதை நல்ல வருமானமாக நாம் கருதலாம்.
கடன் சந்தை மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறுகிய காலத்துக்கு மட்டுமே ஏற்றவை என்பதால், இவற்றின் மூலம் 7% - 8% வருமானம் கிடைத்தாலே நல்ல வருமானம் என்று சொல்லலாம். எனவே, மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் நீண்ட கால நோக்கில் ஓரளவு நல்ல லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாமே தவிர, மிக அதிகமான லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது சரியானதல்ல.
- ‘லாபம்’ மூலம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டைத் தொடங்க:
- bit.ly/labham-money லிங்க் க்ளிக் செய்து எங்களின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ‘Hi’ என்று மெசேஜ் செய்யவும்.
- அல்லது, ஃபோனில் அழைக்கவும்96002 96001
- அல்லது நேரடியாக முதலீட்டைத் தொடங்க,my.labham.money பேஜில் லாகின் செய்யவும்.