மல்ட்டிகேப் ஃபண்ட் Vs ஃப்ளெக்ஸிகேப் ஃபண்ட்... எதில் அதிக லாபம் கிடைக்க வாய்ப்புண்டு?

பொதுவாக, ஒரே மாதிரி இரண்டு விஷயங்கள் இருந்தால், எதை தேர்வு செய்வது என்கிற குழப்பம் எல்லோருக்கும் வரவே செய்யும். அப்படி ஒரு குழப்பம்தான் மல்ட்டிகேப் ஃபண்ட் மற்று ஃப்ளெக்ஸிகேப் ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது முதலீட்டாளர்களுக்கு ஏற்படுகிறது.
என்ன வித்தியாசம்?
இந்த இரு ஃபண்டுகளும் மேலோட்டமாகப் பார்க்கும்போது ஒரே மாதிரியாகத் தோன்றினாலும், இவற்றுக்கு இடையில் அடிப்படையில் ஓர் வித்தியாசம் இருக்கிறது. செபி அமைப்பின் விதிமுறைப்படி, மல்ட்டிகேப் ஃபண்டுகளில் முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் பணம், மிகப் பெரிய நிறுவனங்களின் லார்ஜ்கேப் பங்குகள், நடுத்தர அளவு நிறுவனங்களின் மிட்கேப் பங்குகள், சிறிய அளவு நிறுவனங்களின் ஸ்மால்கேப் பங்குகளில் குறைந்தபட்சம் தலா 25% முதலீடு செய்யப்படும். இதுவே ஃப்ளெக்ஸிகேப் ஃபண்டுகள் என்கிறபோது, லார்ஜ்கேப் பங்குகள், மிட்கேப் பங்குகள், ஸ்மால்கேப் பங்கு களில் இத்தனை சதவிகிதம் முதலீடு செய்ய வேண்டும் என்று எந்த ஒரு வரையறையும் இல்லை. உதாரணமாக, இந்த ஃபண்டில் அதிக ரிஸ்க்கான மிட்கேப் பங்குகள் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளில் எவ்வளவு அதிகமான சதவிகிதம் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். அதேபோல் முதலீட்டு அளவைக் குறைத்துக்கொள்ளவும் செய்யலாம்.
மல்ட்டிகேப் - ஃப்ளெக்ஸிகேப் ஃபண்டுகளின் கடந்த காலம்...
இந்த மல்ட்டிகேப் ஃபண்ட் மற்றும் ஃப்ளெக்ஸிகேப் ஃபண்ட் முதலீட்டாளர்களின் மனம் கவர்ந்த பிரபலமான ஃபண்டுகளாக இருக்கின்றன. மேலும், இந்த ஃபண்டுகள், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் மிகப் பெரிய பிரிவாக உள்ளன.
இந்தியாவில் நீண்ட காலமாக மல்ட்டிகேப் ஃபண்ட் செயல்பட்டு வருகிறது. 2021 ஜனவரி மாதத்தில் ஃப்ளெக்ஸிகேப் ஃபண்டை செபி அமைப்பு புதிதாக அறிமுகப்படுத்தியது. தற்போதைய நிலையில், 40-க்கும் மேற்பட்ட ஃப்ளெக்ஸிகேப் ஃபண்ட் திட்டங்களும், 25-க்கும் மேற்பட்ட மல்ட்டிகேப் ஃபண்ட் திட்டங்களும் உள்ளன.
ஃப்ளெக்ஸிகேப்...
அனைத்து சந்தை மதிப்புப் பிரிவையும் சேர்ந்த பங்குகளில் சூழ்நிலைக்கேற்ப முதலீடு செய்யும் வசதிக்காகப் பல மல்ட்டிகேப் ஃபண்டுகள் ஃப்ளெக்ஸிகேப் ஃபண்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. அதனால்தான், ஃப்ளெக்ஸிகேப் ஃபண்டுகளின் எண்ணிக்கை மற்றும் நிர்வகிக்கும் தொகை அதிகமாக உள்ளது.
வருமான ஒப்பீடு...
2024 அக்டோபர் 8-ம் தேதி நிலவரப்படி, மல்ட்டிகேப் ஃபண்ட் பிரிவின் சராசரி வருமானம் கடந்த 1 மற்றும் 3 ஆண்டுக் காலத்தில் முறையே 41.03% மற்றும் 19.90 சதவிகிதமாக உள்ளது. இதே காலகட்டத்தில், ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டுகளின் சராசரி வருமானம் முறையே 37.20% மற்றும் 16.01 சதவிகிதமாக உள்ளது.
ஃப்ளெக்ஸிகேப் ஃபண்டுகளைவிட மல்ட்டிகேப் ஃபண்டுகள் அதிக வருமானம் கொடுக்க, ஸ்மால்கேப் பங்குகளே காரணமாகும்.
மல்ட்டிகேப் ஃபண்டுகளில்...
2024-ம் ஆண்டு ஆகஸ்ட் இறுதி நிலவரப்படி, மல்ட்டி கேப் ஃபண்டுகளில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் சராசரியாக 39.57% லார்ஜ்கேப் பங்குகளிலும், 26.08% மிட்கேப் பங்குகளிலும், 29.08% ஸ்மால்கேப் பங்குகளிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளன.
ஃப்ளெக்ஸிகேப் ஃபண்டுகளில்...
ஃப்ளெக்ஸிகேப் ஃபண்டு களில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் சராசரியாக 62.83% லார்ஜ்கேப் பங்குகளிலும், 15.29% மிட்கேப் பங்குகளிலும், 11.35% ஸ்மால்கேப் பங்குகளிலும் முதலீடு செய்யப்பட்டுள்ளன. அதாவது, மல்ட்டிகேப் ஃபண்டுகளில் ஸ்மால்கேப் பங்குகளில் மேற்கொள்ளும் முதலீடு 29.08 சதவிகிதமாக உள்ளது; இதுவே ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டில் 11.35 சதவிகிதமாக இருக்கிறது.
டாப் ஃபண்டுகளின் வருமானம்...
கடந்த மூன்றாண்டுக் காலத்தில் டாப் 5 ஃப்ளெக்ஸி கேப் ஃபண்டுகளின் வருமானம் 24% - 27% ஆகவும், மல்டிகேப் ஃபண்டுகளின் வருமானம் 21% - 27 சதவிகிதமாகவும் உள்ளது. டாப் ஃபண்டுகளின் வருமானத்தைப் பொறுத்தவரை, இரு ஃபண்ட் பிரிவுகளின் வருமானமும் ஓரளவுக்கு நெருக்கமாகவே உள்ளன.
மல்ட்டிகேப் ஃபண்ட் Vs ஃப்ளெக்ஸிகேப் - எதில் அதிக ரிஸ்க், லாபம்?
மல்ட்டிகேப் ஃபண்டுகளில் லார்ஜ்கேப் பங்குகள், மிட்கேப் பங்குகள், ஸ்மால்கேப் பங்ககளில் தலா 25% முதலீடு செய்யப்படும் வரம்பு இருப்பதால், மூலதனம் மற்றும் வருமானம் மீதான ரிஸ்க் ஓரளவுக்குக் குறைவாக இருக்கும்.
ஃப்ளெக்ஸிகேப் ஃபண்டில் அதிக ரிஸ்க்கான மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகளில் ஃபண்ட் மேனேஜர்கள் எவ்வளவு அதிகமாகவும், அதே சமயம் எவ்வளவு குறைவாகவும் வேண்டுமானாலும் முதலீடு செய்ய முடியும். அந்த வகையில், இந்த ஃபண்ட் அதிக ரிஸ்க்கானதாகவும் அமைய வாய்ப்புள்ளது.
எது பெஸ்ட்...?
முதலீட்டாளரின் ரிஸ்க் எடுக்கும் திறன் அதிகமாக இருந்தால் ஃப்ளெக்ஸிகேப் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்; குறைவாக இருந்தால் மல்ட்டிகேப் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.
இந்த இரு ஃபண்டுகளிலும் குறைந்தபட்ச முதலீட்டுக் காலம் ஐந்து ஆண்டுகளுக்குமேல் இருக்கும்பட்சத்தில்தான் முதலீடு செய்ய வேண்டும். ஏற்கெனவே, ஃப்ளெக்ஸிகேப் ஃபண்டில் முதலீடு செய்துவரும் நிலையில் கூடுதல் முதலீடு செய்ய வேண்டும் என்றால் மல்ட்டிகேப் ஃபண்டில் முதலீடு செய்யலாம். இதுவே மல்ட்டிகேப் ஃபண்டில் முதலீடு செய்துவந்தால், கூடுதல் முதலீட்டை ஃப்ளெக்ஸிகேப் ஃபண்டில் செய்யலாம்.
- ‘லாபம்’ மூலம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டைத் தொடங்க:
- bit.ly/labham-money லிங்க் க்ளிக் செய்து எங்களின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ‘Hi’ என்று மெசேஜ் செய்யவும்.
- அல்லது, ஃபோனில் அழைக்கவும்96002 96001
- அல்லது நேரடியாக முதலீட்டைத் தொடங்க,my.labham.money பேஜில் லாகின் செய்யவும்.