மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி: செய்யக்கூடாத 5 தவறுகள்!

இன்றைக்கு மியூச்சுவல் ஃபண்டில் சீரான முதலீட்டுத் திட்டம் (Systematic Investment Plan - SIP) பற்றி தெரியாதவர்கள் மிக மிகக் குறைவு. ஏனெனில், நீண்ட காலத்தில் அதிக செல்வம் சேர்க்கவும், பிள்ளைகளின் உயர்கல்வி & கல்யாணச் செலவுகள், சொந்த வீடு வாங்குதல், பணி ஓய்வுக் காலத்துக்கான தொகுப்பு நிதி ஆகிய வற்றுக்கான பணத்தைச் சேர்க்க மியூச் சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி முறை உதவி வருகிறது.

அதிலும் குறிப்பாக, பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங் களில் (Equity Mutual Fund) செய்து வரும் எஸ்.ஐ.பி முதலீடு நல்ல பலனைத் தந்து வருகிறது. இதனால், மாதச் சம்பளக்காரர்கள் பெரும்பாலானோர் மேற்கொண்டு வரும் ஒரு முக்கியமான முதலீட்டு முறையாக இந்த எஸ்.ஐ.பி உள்ளது.

1. எஸ்.ஐ.பி தவணையை தவறவிடுவது...

பங்குச் சந்தை சார்ந்த திட்டங்களில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வரும் போது, எஸ்.ஐ.பி தவணையைத் தவறவிடுவது முதல் பெரும் தவறாகும். முருகன் என்பவர் மாதம் ரூ.25,000 வீதம் 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்து வருவதாக வைத்துக்கொள்வோம். இவரின் முதலீட்டுக்கு ஆண்டுக்கு சராசரியாக 10% வருமானம் கிடைத்தால் 20 ஆண்டு இறுதியில் அவருக்கு ரூ.1.91 கோடி கிடைத்திருக்கும்.

மணி என்பவரும், முருகன் முதலீட்டை ஆரம்பிக்கும்போதுதான் முதலீடு செய்யத் தொடங்கினார். ஆனால், அவரால் இரண்டா வது தவணை ரூ.25,000-ஐ கட்ட முடியவில்லை. இவ்வாறு தவறவிடப்பட்ட எஸ்.ஐ.பி தவணைத் தொகை அவரது தொகுப்பு நிதியில் மிகப் பெரிய வித்தியாசத்தை உருவாக்கியுள்ளது. அதாவது, மணிக்கு முருகனைவிட ரூ.2,69,618 குறைவாகவே கிடைத்தது. 20 ஆண்டுக் காலத்தில் ஒரு முறை ரூ.25,000 எஸ்.ஐ.பி-யை தவறவிட்டது, இந்த அளவுக்கு அதிக இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவே இந்த ஃபண்ட் 12% அல்லது 15% வருமானம் கொடுத் திருந்தால் அவருக்கு ஏற்பட்ட இழப்பு இன்னும் அதிகமாக இருக்கும்.

2. பங்குச் சந்தை ஃபண்டுகளில் இடையில் பணம் எடுப்பது...

திடீர் செலவுகளுக்கு, பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டில் மேற்கொண்டுவரும் எஸ்.ஐ.பி முதலீட்டிலிருந்து பணம் எடுப்பது இரண்டாவது பெரும் தவறாகும். இப்படிச் செய்வதால் என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உதாரணத்துடன் பார்ப்போம்.

கண்ணன் மற்றும் சுரேஷ் இருவரும் மாதம்தோறும் ரூ.5,000 முதலீடு செய்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் தங்களின் பணி ஓய்வுக்காலத்துக்காக முதலீடு செய்து வருகிறார்கள். இருவரும் 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்துவருகிறார்கள். பணி ஓய்வுக் காலத்துக்கு 10 ஆண்டு இருக்கும் நிலையில் இருவரும் முதலீட்டை நிறுத்திவிடுகிறார்கள். இருவரின் ரூ.12 லட்சம் முதலீட்டுக்கும் ஆண்டுக்கு 10 சதவிகிதம் வருமானம் கிடைத் தால் 20 ஆண்டு இறுதியில் ரூ.36.2 லட்சம் சேர்ந்திருக்கும். இந்த நிலையில், கண்ணன், ரூ.36.2 லட்சத் திலிருந்து ரூ.2 லட்சத்தை மட்டும் எடுத்துக் கொள்கிறார். மேற்கொண்டு முதலீடு எதுவும் செய்யாமல், மீதிப் பணத்தை எடுக்காமல் முதலீட்டை நிர்வகிக்கிறார். மணியும் மேற்கொண்டு எதுவும் முதலீடு செய்யவில்லை. ஆனால், கண்ணன் எடுத்ததுபோல பணம் எதுவும் எடுக்காமல் முதலீட்டைத் தொடர்ந்து நிர்வகிக்கிறார்.

இந்த முதலீடுகளுக்கு ஆண்டுக்கு சராசரியாக 10% வருமானம் கிடைத்தால், அடுத்த பத்து ஆண்டுகள் கழித்து, பணம் எதுவும் எடுக்காத மணிக்கு ரூ.93.89 லட்சம் கிடைக்கும் நிலையில், கண்ணனுக்கு ரூ.88.71 லட்சம் மட்டுமே கிடைக்கிறது. ரூ.2 லட்சத்தை இடையில் எடுத்தவருக்கு ரூ.5.18 லட்சம் குறைவாகக் கிடைக்கிறது. இதுவே கண்ணன், 20 ஆண்டுகளுக்குப் பிறகு எடுக்காமல், இடையில் பணத்தை எடுத்திருந்தால் இழப்பு இன்னும் அதிகமாக இருக்கும்.

3. சந்தை இறக்கத்தின்போது எஸ்.ஐ.பி முதலீட்டை நிறுத்துவது...

இது மூன்றாவது பெரும் தவறு. சந்தை இறக்கத்தின்போது எஸ்.ஐ.பி முதலீட்டை நிறுத்துவது என்ன பாதிப்பை ஏற்படுத்தும் எனப் பார்ப்போம். பங்குச் சந்தை சரிவின்போது பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் என்.ஏ.வி மிகவும் இறங்கிக் காணப்படும். அப்போது முதலீட்டை நிறுத்தாமல் தொடரும்பட்சத்தில் அதிக யூனிட்டுகள் ஒதுக்கீடு செய்யப்படும். உதாரணமாக, ஒரு ஃபண்டின் என்.ஏ.வி ரூ.18 என்கிற நிலையில் ஒருவர் ரூ.10,000 முதலீடு செய்தால், அவருக்கு 555.55 யூனிட்டுகள் கிடைக்கும். இதுவே என்.ஏ.வி ரூ.15 ஆக குறைந்துவிட்டால் அவருடைய ரூ.10,000 முதலீட்டுக்கு 666.66 யூனிட்டுகள் கிடைக்கும். இதனால் கூடுதலாகக் கிடைக்கும் யூனிட்டு களை இழந்துவிடுகிறார்கள்.

4. சந்தை இறக்கத்தில் கூடுதல் முதலீட்டை மேற்கொள்ளாதது...

நான்காவது பெரும் தவறு, சந்தை இறக்கத் தில் கூடுதல் முதலீட்டை மேற்கொள்ளாதது ஆகும். இது என்ன பாதிப்பை ஏற்படுத்தும் எனப் பார்ப்போம். பங்குச் சந்தை சரிவில் இருக்கும்போது கூடுதலாக முதலீடு (Additional Investment) செய்யும்பட்சத்தில், இன்னும் அதிகமான யூனிட்டுகள் கிடைக்கும். ஒரு நல்ல ஃபண்டின் என்.ஏ.வி மதிப்பு சந்தையின் இறக்கத்தால் மிக அதிகமாகக் குறைந்திருந்தால், எஸ்.ஐ.பி முதலீட்டுத் தொகையுடன், முடிந்த அளவுக்குக் கூடுதலாக ஒரு தொகையை முதலீடு செய்து வரலாம். இப்படி சந்தை இறக்கத்தின் போதெல்லாம் கூடுதல் முதலீடுகளைத் தொடர்ந்து செய்வதன் மூலம், சந்தை ஏற்றத்தின்போது என்.ஏ.வி மதிப்பு உயர்ந்து அதிக லாபம் கொடுக்கும் வாய்ப்பு உருவாகும்.

5. உபரிப் பணத்தை முதலீடு செய்யாமல் இருப்பது...

ஐந்தாவது தவறு, வரக்கூடிய வருமானத்தில் அனைத்து மாதாந்தரச் செலவுகளும் போக மீதமாகும் உபரிப் பணத்தை சரியாக நிர்வகிக்காமல் விட்டுவிடுவதாகும். சிலர் மாதம் 5,000, 10,000 என எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்து வருகிறார்கள். ஆனால், மாதச் சம்பளத்தில் செலவுகள் போக உபரியாக 10,000, 15,000 ரூபாய் எனப் பலரது வங்கி சேமிப்புக் கணக்கிலேயே கிடக்கிறது. இவர்கள் முதலீட்டை இன்னும் அதிகரிக்கும் தகுதி இருந்தும், அதைச் செய்யாமல் விட்டுவிடுகிறார்கள். ஏதாவது செலவு செய்யலாமா எனவும் யோசிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.

இவ்வாறு உங்கள் சம்பளத்தில் தொடர்ந்து மூன்று மாதங்கள் ஒரு குறிப்பிட்ட தொகை மீதமாகிறது என்றால், அதை எப்படி பயனுள்ள வகையில் திட்டமிடலாம் எனப் பாருங்கள். மாதச் சம்பளத்தில் சராசரியாக 15% - 20% வரை மீதமாகிறது எனத் தெரிந்தால், அதில் 10% அளவு தொகையை எஸ்.ஐ.பி முதலீட்டில் கூடுதலாகச் சேர்த்து போட்டு வரலாம்.

    ‘லாபம்’ மூலம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டைத் தொடங்க:
  • bit.ly/labham-money லிங்க் க்ளிக் செய்து எங்களின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ‘Hi’ என்று மெசேஜ் செய்யவும்.
  • அல்லது, ஃபோனில் அழைக்கவும்96002 96001
  • அல்லது நேரடியாக முதலீட்டைத் தொடங்க,my.labham.money பேஜில் லாகின் செய்யவும்.