மாதந்தோறும் ரூ.10,000, 10 ஆண்டுகள் முதலீடு செய்தால்...? SIP-ன் சூப்பர் பவர்!

சிறிய, நிலையான முதலீடுகளைச் செய்வதன் மூலம் நீண்டகாலத்தில் அதிக செல்வத்தைச் சேர்க்க முடியும் என்பது பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இங்குதான், முறையான முதலீட்டுத் திட்டம் (Systematic Investment Plan-SIP) முக்கியத்துவம் பெறுகிறது. இது உங்கள் செல்வத்தை வளர்ப்பதற்கான மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் எளிய முதலீட்டு வழி முறைகளில் ஒன்று.

எஸ்.ஐ.பி-யின் சக்தி!

பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் (Equity Mutual Fund) திட்டங்களில் எஸ்.ஐ.பி முறையில் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.10,000 முதலீடு செய்தால் என்ன வருமானம் கிடைக்கும்?

நீங்கள், 2014 செப்டம்பர் 29-ம் தேதி யிலிருந்து மாதம் 10,000 ரூபாயை முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளீர்கள். அது, 2024 செப்டம்பர் 29-ம் தேதியுடன் பத்தாண்டுகளை நிறைவு செய்கிறது, இந்தப் பத்தாண்டுக் காலத்தில் மொத்தம் ரூ.12 லட்சம் முதலீடு செய்யப்பட்டிருக்கும். இந்தத் தொகையானது, நாம் முதலீடு செய்திருக்கும் ஃபண்ட் வகையைப் பொறுத்து வளர்ந்திருக்கும்.

10 ஆண்டு, மாதந்தோறும் ரூ.10,000...!

முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்படும் பணம், மிகப்பெரிய நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யப்படும் லார்ஜ் கேப் ஃபண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக 16.56% வருமானம் கிடைத்து, ரூ. 28,32,405 ஆக அதிகரித்திருக்கும். இதுவே, நடுத்தர அளவு நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யப்படும் மிட் கேப் ஃபண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக 21.82% வருமானம் கிடைத்து, ரூ. 37,62,535-ஆக அதிகரித்திருக்கும்.

சிறிய அளவு நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யப்படும் ஸ்மால் கேப் ஃபண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக 23.38% வருமானம் கிடைத்து, ரூ. 41,11,240 ஆக அதிகரித்திருக்கும்.லார்ஜ் கேப் பங்குகள், மிட் கேப் பங்குகள், ஸ்மால் கேப் பங்குகளில் குறைந்தபட்சம் தலா 25% முதலீடு செய்யும் மல்டி கேப் ஃபண்டுகளில் 20.60% வருமானம் கிடைத்து ரூ. 35,25,448 ஆக உயர்ந்திருக்கும். இதுவே லார்ஜ் கேப் பங்குகள், மிட் கேப் பங்குகள், ஸ்மால் கேப் பங்குகள் எனக் கலந்து கட்டி முதலீடு செய்யும் ஃபிளெக்சி கேப் ஃபண்டுகள் ஆண்டுக்கு 18.47% லாபம் கொடுத்து ரூ.31,66,218-ஆக அதிகரித்திருக்கும்.

எந்த வகை ஃபண்டில் எஸ்.ஐ.பி!

இந்த ஈக்விட்டி ஃபண்டுகள் அவற்றின் ரிஸ்குக்கு ஏற்ப அதிக வருமானத்தைக் கொடுத்துள்ளன. அதிக வருமானம் வேண்டும் என்றால் மிட் மற்றும் ஸ்மால் கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள். எந்த அளவுக்கு அதிக வருமானம் கிடைக்குமோ, அந்த அளவுக்கு அதிக ரிஸ்க் இருக்கிறது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.

மிட் கேப் ஃபண்ட் என்றால் குறைந்தபட்ச முதலீட்டுக் காலம் 10 ஆண்டுகளாகவும், ஸ்மால் கேப் ஃபண்ட் என்றால் 15 ஆண்டுகளாகவும் இருப்பது நல்லது. அப்போதுதான் ரிஸ்க்கைத் தாண்டி அதிக வருமானம் பெற முடியும். ஒருவர் ஓரளவுக்குத்தான் ரிஸ்க் எடுக்க முடியும் என்றால் அவர் லார்ஜ் கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். இந்த ஃபண்டில் குறைந்தபட்ச முதலீட்டுக் காலம் ஐந்தாண்டுகளுக்கு மேல் இருப்பது நல்லது.

நடுத்தர அளவு ரிஸ்க் எடுக்கக் கூடியவர்கள் மல்டி கேப் ஃபண்டுகள், ஃபிளெக்ஸி கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்துவரலாம். இந்த ஃபண்டிலும் குறைந்தபட்ச முதலீட்டுக் காலம் ஐந்தாண்டுகளுக்கு மேல் இருப்பது நல்லது.

பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் நீண்ட காலத்தில் பொதுவாக பணவீக்க விகிதத்தைவிட இரு மடங்கு லாபத்தை அளித்துவருகின்றன. பணவீக்க விகிதம் 6%-7% என்றால் இந்த ஃபண்டுகள் மூலமான வருமானம் 12%-14 சதவிகிதமாக இருக்கும்.

மாதந்தோறும் ரூ.10,000 வீதம் 10 ஆண்டுகளுக்கு முதலீடு செய்து, ஆண்டுக்கு 12% வருமானம் கிடைத்தால், ரூ.23.2 லட்சம் கிடைக்கும். இதுவே வருமானம் 15% என்றால் ரூ. 27.8 லட்சம் கிடைக்கும்.

பங்குச் சந்தை ஃபண்டுகளில் நீண்ட காலத்துக்கு எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யும்போது சந்தையின் ஏற்ற, இறக்கத்தை முதலீட்டாளர்கள் சந்தித்திருப்பார்கள். அவர்கள் இந்த ஏற்ற, இறக்கம் பற்றி... குறிப்பாக இறக்கம் பற்றிக் கவலைப்படாமல் நீண்ட காலத்துக்குத் தொடரும்பட்சத்தில் மட்டுமே பணவீக்க விகிதத்தைவிட இரு மடங்குக்கு அதிகமாக லாபம் ஈட்ட முடியும்.

    ‘லாபம்’ மூலம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீட்டைத் தொடங்க:
  • bit.ly/labham-money லிங்க் க்ளிக் செய்து எங்களின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ‘Hi’ என்று மெசேஜ் செய்யவும்.
  • அல்லது, ஃபோனில் அழைக்கவும்96002 96001
  • அல்லது நேரடியாக முதலீட்டைத் தொடங்க,my.labham.money பேஜில் லாகின் செய்யவும்.